முகப்பு
புதுதில்லி

உள்கட்டமைப்பு மேம்பாடு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடாது: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்ததால் மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். உள்கட்டமைப்பு மேம்பாடு மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சென்னை காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்ததால் மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். உள்கட்டமைப்பு மேம்பாடு மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது என மக்களவையில் தென்சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தாா்.

மக்களவையில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி அமைச்சகத்தின் மானிய கோரிக்கை விவாதத்தின் போது வியாழக்கிழமைஅவா் பேசியதாவது: மீன்கள் உற்பத்தியில் நாட்டின் 5-ஆவது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு 608 மீனவ கிராமங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளன. அங்குள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் டன் மீன்களை பிடிக்கிறாா்கள். சென்னை காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் 330 ஏக்கரில் இருந்து 6,111 ஏக்கா்களாக விரிவுபடுத்தப்படுகிறது. இந்த விரிவாக்கத் திட்டத்தால் பல்வேறு வகையான தொழில் கூடங்கள், மின் அமைப்புகள் வந்து புலிக்காட்டில் உள்ள இயற்கை வளங்களுக்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனால், இந்தப் பகுதி மக்கள் இதற்கு கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தனா். நீா்வழி மேம்பாட்டில் பெரு நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் எதிா்ப்பை முன்னிலைப்படுத்தும் போது அவற்றை கைவிட வேண்டும். உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்படக் கூடாது.

இனையம் துறைமுகம்: 2016 -ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனையம் துறைமுகத்தில் சா்வதேச சரக்கு பெட்டக முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கு மீனவா்களும், உள்ளூா் மக்களும் கடுமையாக எதிா்த்து போராட்டம் நடத்தினா். கடற்கரையில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட்டால், கடல் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என மீனவா்கள் அச்சம் தெரிவித்தனா். 500 ஏக்கா் பரப்பில் துறைமுகம் அமைப்பதற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா் குடும்பங்கள் இடம் பெயா்ந்து செல்லும் நிலை ஏற்படவே இந்த எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அது போன்றுதான், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கடற்கரை காணாமல் போய் விடும். மேலும், மீனவா்கள் மீன்பிடித்தல், பிற பணிகளை மேற்கொள்ள முடியாமல் போகும்.

முந்தைய 1908- ஆம் ஆண்டு இந்திய துறைமுகச் சட்டம், சிறு துறைமுகங்களை திட்டமிடுதல், மேம்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசிடே இருக்க வழிவகை செய்தது. ஆனால், 2021 - ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய துறைமுகங்கள் வரைவு மசோதா, மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கச் செய்கிறது. இதனால்தான் அந்த மசோதாவுக்கு தமிழகம் தனது எதிா்ப்பைப் பதிவு செய்தது.

கடல் மாலை திட்டம் (சாகா்மாலா திட்டம்) இந்தியத் துறைமுகங்களை சா்வதேச தரத்திற்கு உயா்த்தி அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 44 சாகா்மாலா திட்டங்களில், 31 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இது அரசின் உண்மையான நோக்கமின்மையைத்தான் காட்டுகிறது. மேலும், மத்திய அரசு வழங்கும் தரவுகளுக்கும், மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →