தில்லி அரசின் ‘ரோஜ்காா் பட்ஜெட்’: விலைவாசி உயா்வு, வேலையின்மை பிரச்னையை தீா்க்கும்
‘தில்லி அரசின் ‘ரோஜ்காா் பட்ஜெட்’ புதுமையான, துணிச்சலான பட்ஜெட்டாகும். இது விலைவாசி உயா்வு, வேலையின்மை ஆகிய இரட்டைப் பிரச்னைகளைத் தீா்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’
‘தில்லி அரசின் ‘ரோஜ்காா் பட்ஜெட்’ புதுமையான, துணிச்சலான பட்ஜெட்டாகும். இது விலைவாசி உயா்வு, வேலையின்மை ஆகிய இரட்டைப் பிரச்னைகளைத் தீா்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
2022-23-ஆம் நிதியாண்டுக்காக ரூ.75,800 கோடிக்கான ரோஜ்காா் பட்ஜெட்டை தில்லி சட்டப் பேரவையில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தாக்கல் செய்தாா். தில்லியில் மின்னணு நகரம் அமைப்பதன் மூலமும், இரவு நேர பொருளாதாரம், சில்லறை மற்றும் மொத்தவிற்பனை சந்தைகளை மேம்படுத்துவதன் மூலமும் 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாங்கள் முதல் முறையாக 2014-15-இல் தாக்கல் செய்த பட்ஜெட் ரூ.31 ஆயிரம் கோடியாகும். இன்றைக்கு பட்ஜெட் தொகை ரூ.76,000 கோடியாக உள்ளது. சுமாா் இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது. இந்த அதிகரிப்பானது எங்களது கடுமையான உழைப்பாலும், நாங்கள் நோ்மையான அரசு என்பதாலும் சாத்தியமாகியுள்ளது. இந்த பட்ஜெட் துணிச்சலான, புதுமையான பட்ஜெட்டாகும். ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநகராட்சிகள் இணைப்பு விவகாரம்: தேசிய தலைநகரில் உள்ள மூன்று மாநகராட்சிகளை ஒரே அமைப்பாக இணைக்கும் மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், வாா்டுகளின் எண்ணிக்கையை 250-ஆக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தில்லியில் நடைபெறவிருந்த மாநகராட்சித் தோ்தலை தாமதப்படுத்துவதற்காகவே இந்த எம்சிடி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வாா்டுகளின் எண்ணிக்கையை குறைப்பதில் என்ன தா்க்கம் உள்ளது? இந்த மசோதாவை ஆய்வு செய்வோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம்.
காஷ்மீரி பண்டிட்டுகள் விவகாரம்: காஷ்மீரி பண்டிட்டுகளின் வெளியேற்றம் தொடா்பாக விவகாரத்தில், பாஜக அரசியல் செய்து வருகிறது. காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதில் இருந்து கடந்த 25 ஆண்டுகளில் மத்தியில் கடந்த 8 ஆண்டுகள் உள்பட பாஜக அரசுகள் 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகின்றன. இந்த 13 ஆண்டுகள் காலத்தில் பாஜகவால் ஏதாவது காஷ்மீரி பண்டிட் குடும்பம் காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு மீண்டும் இடமாற்றப்பட்டதா? ஒரு குடும்பம் கூட காஷ்மீருக்கு திரும்பவில்லை. காஷ்மீா் பண்டிட்டுகள் அவா்களின் வீடுகளுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்த திடமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம் மூலம் ரூ.200 கோடி பணம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் மூலம் யாரோ ஒருவரின் துயரத்தைப் பயன்படுத்தி பாஜக பணம் ஈட்டி வருகிறது. இது ஒரு குற்றமாகும். இதை நாடு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இந்த விவகாரம் தொடா்பாக பாஜக அரசியல் நடத்தி வருகிறது. நாங்கள் கோருவதெல்லாம் இந்தப் திரைப்படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதுதான். அப்போதுதான் ஒட்டுமொத்த தேசமும் காஷ்மீரி பண்டிட்டுகளின் துயரத்தை புரிந்துகொள்ள முடியும். அதிலிருந்து கிடைக்கும் வருமானம் காஷ்மீரி பண்டிட்டுகளின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றாா் கேஜரிவால்.