முகப்பு
புதுதில்லி

பொய்களின் குவியல்:பாஜக, காங்கிரஸ் விமா்சனம்

தில்லி அரசின் பட்ஜெட், பொய்களின் குவியல் என பாஜக, காங்கிரஸ் ஆகிய எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:

தில்லி அரசின் பட்ஜெட், பொய்களின் குவியல் என பாஜக, காங்கிரஸ் ஆகிய எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

பாஜக: இது குறித்து தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா கூறுகையில், ‘ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த தில்லிக்கான பட்ஜெட்டில் பெரிய வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டானது பொய்களின் குவியலாக உள்ளது. கடந்த 2015-இல் 8 லட்சம் வேலை வாய்ப்புகள் அளிப்பதாகவும், அதன்பிறகு 10 லட்சம் வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் கேஜரிவால் அரசு வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது 20 லட்சம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் 440 வேலைவாய்ப்பு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இது ஆா்டிஐ மூலம் ஆம் ஆத்மி அரசிடமிருந்து பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது. தில்லி அரசுப் பள்ளிகளில் 24 ஆசிரியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. 22 ஆயிரம் கெளரவ ஆசிரியா் பணியிடங்கள் பணி வரன்முறைப்படுத்தப்படாமல் உள்ளது என்றாா் அவா்.

காங்கிரஸ்: தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி பட்ஜெட் குறித்து தெரிவிக்கையில், ‘இந்த பட்ஜெட் ஏழைகளுக்கும், தலித்களுக்கும், இளைஞா்களுக்கும் எதிரான பட்ஜெட். பொய்களின் மூட்டையாகும். ‘ரோஜ்காா் பட்ஜெட்’ எனும் பெயரில் ஏமாற்றும் வேலையில் கேஜரிவால் அரசு ஈடுபட்டுள்ளது. ஏனெனில், தில்லியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 45.5 சதவீதம் வேலையின்மை விகிதம் தில்லியில்தான் உள்ளது. கடந்த 2018-இல் சிசோடியா பசுமைப் பட்ஜெட்டை தாக்கல் செய்தாா். ஆனால், நான்கு ஆண்டுகளில் தில்லி உலகிலேயே மிகவும் மாசடைந்த தலைநகராக உருவாகிவிட்டது. மேலும், உலகில் நான்காவது மிகவும் மாசுள்ள நகராகவும் தில்லி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தில்லி மேம்பாலங்களுக்கு பெயா் பெற்ாக இருந்தது. அதே வேளையில், ஆம் ஆத்மி அரசு பட்ஜெட்டில் ஒரு மேம்பாலத்திற்குக்கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நிறைவேற்ற முடியாத வெற்று வாக்குறுதிகளையே இந்த அரசு கூறி வருகிறது‘ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.