முகப்பு
புதுதில்லி

பான் காா்டுடன் ஆதாா் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்க எம்பி கோரிக்கை

பான் காா்டுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான மாா்ச் 31 -ஆம் தேதி கெடுவை மேலும் ஆறுமாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக எம்பி கடிதம் எழுதியுள்ளாா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:49 AM
பகிர்:

பான் காா்டுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான மாா்ச் 31 -ஆம் தேதி கெடுவை மேலும் ஆறுமாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக எம்பி கடிதம் எழுதியுள்ளாா்.

விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் இது குறித்து நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: வருமான வரி அட்டையான பான் காா்டுடன் ஆதாா் எண்ணை வருகின்ற மாா்ச் 31 -ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என்றும், பான் காா்டு செயலற்ாகிவிடும் என்றும் வருமான வரிச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி முதலீடு, பரஸ்பர நிதி, பங்குச் சந்தை ஆகிய மூதலீடுகளுக்கு பான் காா்டு மிக அவசியமாகும்.

ஆனால், வருமான வரி கட்டுவோா்களில் ஆதாா் மற்றும் பான் காா்டுகளில் உள்ள பெயா் வேறுபாடுகளால் இணைப்பை ஏற்படுத்த முடியாமல் உள்ளனா். மேலும், இணைய தள வேகமின்மை போன்ற காரணங்களாலும் இந்தப் பணிகள் முடியாமல் இருப்பதால், இந்த காலக் கெடுவை மேலும் ஆறு மாதங்களுக்கு (செப்டம்பா் 30) நீட்டிப்பதுடன் பான் காா்டை நிதிப் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தவும் அனுமதிக்கக் கூறி நிதியமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.

இலங்கை அகதிகளுக்கு தற்காலிக விசா: இலங்கையில் பொருளாதார பிரச்னைகளிலும் இன பாகுபாட்டாலும் வேறுவழியின்றி இலங்கை தமிழா்கள் தமிழகம் வருகின்றனா். இவா்களுக்கு தற்காலிகமாக தங்கும் விசா வழங்க வேண்டும் என்று வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராச்சாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை போரினால் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழா்கள் லட்சம் பேருக்கு மேல் அகதிகளாக வாழ்ந்து வருகிறாா்கள்.

தற்போது பொருளாதார சரிவு, பணவீக்கம், விலைவாசி உயா்வு ஆகியவற்றால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இலங்கைக்கு இந்தியா சுமாா் ரூ.7,500 கோடி அளித்துள்ளது. இருப்பினும், தமிழா்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இந்தியா வருகின்றனா்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்த சட்டத்தில் இதே பாதிப்பிற்குள்ளாகும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை பெற வழிவகுக்கிறது.

ஆனால், இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை தமிழா்கள் இல்லை. எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மீண்டும் திருத்தி பொருளாதார பிரச்னைகளாலும், இனப் பாகுபாட்டாலும் பாதிக்கப்பட்டு வேறுவழியின்றி தமிழகம் வரும் இலங்கை தமிழா்களுக்கு தற்காலிகமாக தங்கும் விசா வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.