முகப்பு
புதுதில்லி

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
தில்லியில் பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பகிர்:


புது தில்லி: இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததாக முதல்வர் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தில்லிக்கு வந்துள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி  ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழக நலன்கள் தொடர்புடைய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திப் பேசினார்.

நம்பிக்கை அளிக்கும் சந்திப்பு: இது தொடர்பாக தமிழ்நாடு இல்லத்தில் மாலையில் செய்தியாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல்வராகப் பதவியேற்ற பிறகு தில்லிக்கு மூன்றாவது முறையாக வந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தேன். இதற்கு நேரம் ஒதுக்கியதற்காக நன்றி. தமிழகத்தின் மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்து, அதில் இடம்பெற்றுள்ள முக்கிய விஷயங்களை பிரதமரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன். அனைத்தையும் அவர் பொறுமையாக கேட்டார். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் பிரதமர் உறுதி அளித்தார். பிரதமருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவு தருவதாகவும் அமைந்திருந்தது. நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது.

முக்கியக் கோரிக்கைகள்: பிரதமரிடம் நான் வைத்த முக்கியக் கோரிக்கைகள் விவரம் வருமாறு: இலங்கையில் தற்போதுள்ள அசாதாரண சூழலில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அவதியுறும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவி செய்வதற்கும், தேவையான அத்தியாவசியப் பொருள்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் வழங்கவும் அனுமதி வழங்க வேண்டும். அதே வேளையில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமையும் அரசியல் உரிமையும் கிடைக்க இலங்கை அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை குறித்தும் கச்சத்தீவு மீட்பு குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.

மேக்கேதாட்டு: உக்ரைன் சூழலால் பாதிக்கப்பட்ட இந்திய  மருத்துவ மாணவர்களின் கல்லூரிப் படிப்பை இந்தியாவிலேயே தொடர அனுமதி அளிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது. மாநிலங்களிடம் செஸ் மற்றும் சர்சார்ஜ் வரி வருவாயைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். ஜூன் 2022-க்கு பின்னர் ஜிஎஸ்டி இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும். நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

நீட் தேர்வு விவகாரம்: முக்கியமாக, "நீட்' பிரச்னை குறித்து பிரதமரிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் எடுத்துரைத்தேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இரண்டாவது முறையாக தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதம் செய்து வருகிறார். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டேன்.

பாதுகாப்புத் தொழில் பூங்கா: அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய வெள்ள நிவாரண நிதியை விரைந்து வழங்குமாறு வலியுறுத்தினேன். காவல் துறை, தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த நிதி ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.

அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பின்போது, தமிழகத்தில் அமைக்கப்படும் புதிய விமான நிலையங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்புத் துறை வசம் உள்ள நிலங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் டிஆர்டிஓ ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். சேலம் இரும்பாலையில் உள்ள மிகை நிலத்தை பாதுகாப்புத் தொழில் பூங்கா அமைக்க வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

கோவையில் விமானத் தொழில்நுட்ப மையம்: மத்திய அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள விமானத் தொழில்நுட்ப மையத்தை கோவையில் அமைக்குமாறு வலியுறுத்தினேன். மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்தேன். அவரிடம்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். அதில் குறிப்பாக சென்னை - கன்னியாகுமரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையை ஆறுவழிச் சாலையாக உருவாக்கவும், சென்னை- மதுரவாயல் உயர்மட்டச் சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கவும், தாம்பரம் -  செங்கல்பட்டு வரை உயர்மட்டப் பாலம் அமைக்கவும், மாநிலத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன்.

அதிகளவில் நெடுஞ்சாலைத் திட்டங்கள்:  அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசிய போது, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத் துறையில் அதிகளவிலான திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாக என்னிடம் அவர் கூறினார். 

அதேபோன்று ராஜ்நாத் சிங் பேசும் போது, நாட்டின் பாதுகாப்புத் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு தமிழ்நாடுதான் உகந்த மாநிலமாகத் திகழ்வதாகப் பாராட்டினார். நான் முன்வைத்த கோரிக்கைகளை எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பலமுறை பேசி உள்ளனர். தொடர்ந்து மீண்டும் அவற்றை வலியுறுத்துவார்கள் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →