சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; இந்தியாவை பாதிக்குமா? - மத்திய அரசு விளக்கம்!
சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இந்தியாவைப் பாதிக்குமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளதைப் பற்றி...
சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இந்தியாவைப் பாதிக்குமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் சேர்ந்து தாக்கியதில், ஈரானின் மதகுரு கமேனி உள்பட முக்கியத் தலைவர்களும் பொதுமக்கள் பலரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கு ஆதரவளித்த வளைகுடா நாடுகள் மீது ஈரானிய ராணுவத்தினர் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி கடுமையான தாக்குதலை நடத்தினர்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாகவும், வளைகுடா நாடுகளில் இருந்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் பெரும்பாலான நாடுகளில், எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. குறைந்த அளவே கச்சா எண்ணெய் இருப்பு வைத்திருந்த நாடுகளில் அதன் தாக்கம் உடனடியாக எதிரொலிக்க தொடங்கியது.
இந்த நிலையில், மக்கள்தொகை அதிகம் கொண்ட நமது நாட்டிலும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சமும் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், பொதுமக்கள் பலரும் தண்ணீர் கேன்கள், டிரம்களின் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கிச் செல்வதால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் சூழல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலும் பலரும் தீர்ந்துவிடும் என்ற அச்சத்தில் பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றதால், பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கு மத்தியில், எல்பிஜி சிலிண்டர்கள் நெருக்கடியைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், கூடுதல் சிலிண்டர்கள் விநியோகத்தைப் பெறுவதற்கான வழிகள் நடைபெற்று வருவதாகவும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் எல்பிஜி-க்கு மாற்று எரிபொருளாக மாநிலங்களுக்கு கூடுதலாக 40,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலர் சுஜாதா சர்மா பேசுகையில், “நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகம் சாதாரணமாகவே இருக்கிறது. 1 லட்சம் பெட்ரோல் பம்புகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள சில பயனாளர்களுக்கு மட்டும் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார்.