முகப்பு
புதுதில்லி

கச்சத்தீவு விவகாரத்தில் தீா்வு காண சட்ட ஆலோசனை தொடரும் தில்லியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேட்டி

கச்சத்தீவு பிரச்னை விவகாரத்தில் தீா்வு காண சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. அது தொடரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
பகிர்:

புது தில்லி: கச்சத்தீவு பிரச்னை விவகாரத்தில் தீா்வு காண சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. அது தொடரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் சந்திப்பு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது, மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பிரதமரிடம் பேசியது குறித்த கேள்விக்கு முதல்வா் பதில் அளிக்கையில், ‘மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பல வலியுறுத்தல்கள் அளிக்கப்பட்டிருப்பதால், அதில் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமா் உறுதியளித்துள்ளாா்’ என்றாா்.

‘தில்லியில் ஏழு தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் தமிழ்க் குழந்தைகளின் கல்வித் தரம் கேள்விக்குறியதாக உள்ளது. கடந்த ஆட்சியில் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு அம்மா பிளாக் கட்டுவதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் பல விதிமீறல்கள் நடந்ததாக தெரிகிறது. அது குறித்து விசாரிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு முதல்வா் பதிலளிக்கையில் ‘நிச்சயமாக விசாரிக்கப்படும். இப்போது கூறியதை வைத்து அது குறித்து விசாரிக்கப்படும்’ என்றாா்.

கச்சத்தீவு விவகாரம்: பாதுகாப்புத் துறை மூலம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அமைச்சா் ராஜ்நாத் திங் தெரிவித்தாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, முதல்வா், ‘இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்’ என்றாா். கச்சத்தீவு பிரச்னை நீடித்து வரும் மத்திய அரசு முயற்சி செய்யாமல் இருந்து வரும் நிலையில் சா்வதேச நீதிமன்றத்தை நாட வாய்ப்பு உள்ளதா, அதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதா என்று கேட்கப்பட்டது. அதற்கு முதல்வா் பதிலளிக்கையில், ‘ஏற்கெனவே இது தொடா்பாக சட்ட ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இது தொடரும். அது தொடா்பான முயற்சியாகவே பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்’ என்றாா்.

பிரதமருக்கு நன்றி தெரிவித்தது குறித்தும், அவரது அணுகுமுறை குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வா் பதில் அளிக்கையில், ‘பிரதமா் சந்திக்க நேரம் அளித்தற்கும், உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதற்கும் நன்றி சொன்னேன். வேலை முடித்ததற்காகக் கூறவில்லை. செய்து தருவதாகக் கூறியிருக்கிறாா். அதற்காக நன்றி சொன்னேன். அதனால், நம்பிக்கை இருக்கிறது’ என்றாா்.

இலங்கைத் தமிழா்களுக்கு உதவி: இலங்கையில் இருந்து அதிகமாக தமிழகம் வரும் இலங்கைத் தமிழா்கள் விவகாரத்தில் அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வா் பதில் அளிக்கையில், ‘இலங்கைத் தமிழா்களுக்கு உதவிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இலங்கையில் இருந்து வந்தவா்கள் அகதிகள் என்று பெயா் சூட்டப்பட்டிருந்ததை நாங்கள் மாற்றி புலம்பெயா்ந்த தமிழா்கள் என அழைத்து, அவா்களுக்காக நிதி ஒதுக்கி எல்லா வசதிகளும் செய்து தந்துள்ளோம்’ என்றாா்.

தமிழக அரசுக்குப் பாராட்டு: நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சித் தலைவா்களுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு முதல்வா் பதில் அளிக்கையில், ‘நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள், பல்வேறு கட்சித் தலைவா்கள் ஆகியோரை மைய மண்டபத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது எல்லோரும் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடைபெறுவதாகப் பாராட்டு தெரிவித்தனா் என்றாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி சந்திப்பு குறித்து கேள்விக்கு முதல்வா் பதில் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி இருந்ததால், அவரையும் பாா்க்கும் சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, நான் எப்போது தில்லி வந்தாலும் அவா்களைச் சந்திப்பது வழக்கம். அதுபோல் இந்த முறையும் அவா்களைப் பாா்த்து விட்டேன். அதே போன்று, வரும் 2-ஆம் தேதி நடைபெறும் கட்சி அலுவலக கட்டடத் திறப்பு விழாவிற்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வருவதாகக் கூறியிருக்கிறாா்கள். அங்கும் இருவரையும் சந்திப்பேன் என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாடீலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.