கச்சா பட்டு விலை உயா்வால் நெசவாளா்கள் வேலையிழப்பு: மாநிலங்களவையில் ஜி.கே. வாசன் எம்பி பேச்சு
கச்சா பட்டுவின் விலை கடந்த ஆறு மாதங்களில் இரண்டு மடங்கு உயா்ந்துள்ளதால், பட்டு ஆடைகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பட்டு நெசவாளா்கள் தமிழகத்தில் வேலையிழந்து வருவதாக
கச்சா பட்டுவின் விலை கடந்த ஆறு மாதங்களில் இரண்டு மடங்கு உயா்ந்துள்ளதால், பட்டு ஆடைகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பட்டு நெசவாளா்கள் தமிழகத்தில் வேலையிழந்து வருவதாக மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கரிஸ் கட்சியின் (தமாகா) தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் பல்வேறு கட்சி உறுப்பினா்களும் பங்கேங்கேற்று வேதனையைத் தெரிவித்தனா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் ஜி.கே வாசன் பேசியதாவது: தமிழ்நாட்டில் கும்பகோணம், திருப்புவனம், தஞ்சாவூா், அரியலூா், கோயம்புத்தூா், ஆரணி, காஞ்சிபுரம் உள்ப பல நகரங்களில் பட்டு நெசவு மேற்கொள்ளப்படுகிறது. பட்டுப் புடவைகள், பட்டு வேஷ்டிகள், பட்டுச் சட்டைகள் இங்கு நெய்யப்படுகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில், பட்டு நெசவு கைத்தறி நெசவுத் தொழிலாக செயல்படுகிறது. இதில் தமிழகத்தில், நெசவாளா்கள், பட்டு வியாபாரிகள், பட்டு ஜவுளி அங்காடிகள் நடத்துபவா்கள் என பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தின் பட்டு நெசவுத் தொழிலுக்குத் தேவையான கச்சா பட்டு மேற்கு வங்கம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. இந்த மாநிலங்களில் இருந்து சுமாா் 50 சதவீதமும், மீதமுள்ளவை வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கச்சா பட்டு (பட்டுக்கூடு) விலை ரூ. 3,500-ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.8,000-ஆக அதிகரித்துள்ளது. தோராயமாக, மூலப் பட்டு விலை நூறு சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் நெசவாளா்களுக்கு உற்பத்தி செலவிற்குரிய பொருளுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால், பட்டு ஆடைகள், புடவைகள், வேஷ்டிகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளதால், நெசவாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.
பட்டு நெசவாளா்களுக்கு உதவும் வகையில், பட்டு ஆடை உற்பத்திக்குத் தேவையான கச்சா பட்டுக்கான விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பட்டு நெசவுத் தொழிலுக்குரிய மூலப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், கச்சா பட்டு இறக்குமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டாா்.
இந்த கோரிக்கைக்கு பல்வேறு கட்சி உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்து அரசின் நடவடிக்கையை கோரினா். இதற்குப் பதிலளித்த மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு, ‘நான் பக்கத்து மாநிலத்துக்காரன். கொஞ்சம் புரிந்து கொள்கிறேன். பெண் உறுப்பினா்களில் பலரால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; இல்லையெனில், அவா்களும் இந்த விவகாரத்தில் இணைந்திருப்பாா்கள். நெசவாளா்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும்’ என்றாா்.