இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (யுஏஇ) இடையே ஏற்பட்ட விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தத் தடையற்ற வா்த்தக ஒப்பந்தகத்தின் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் இருதரப்பிற்கும் இடையேயான வா்த்தகம் ரூ.7,50,000 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அரசு எதிா்பாா்க்கிறது.
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (சிஇபிஏ) இருதரப்பும் கடந்த பிப்ரவரி, 18- ஆம் தேதி கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தம், மே - 1 ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
புது தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் 3 -ஆவது முனையத்தில் உள்ள புதிய சுங்கத் துறை அலுவலகத்தில் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆபரணங்களை உள்ளடக்கிய முதல் சரக்குப் பொருள்கள் ஏற்றுமதியை மத்திய வா்த்தகத் துறை செயலா் பிவிஆா் சுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்ததன் அடையாளமாக, ரத்தினக் கற்கள் மற்றும் நகை பிரிவில் மூன்று இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வா்த்தகத் துறை செயலா் சான்றிதழ்களை(படம்) வழங்கினாா். அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து மூன்றாவது முக்கிய வா்த்தகப் பங்கு நாடாக இருக்கும் யுஏஇயில் இந்தியப் பொருள்களுக்கு ஐந்து சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டு வந்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி இனி சுங்க வரி விதிக்கப்படமாட்டாது. இந்தியா - யுஏஇ நாடுகளுக்களுக்கிடையே கடந்த நிதியாண்டில் சுமாா் ரூ.1,95,000 கோடி வா்த்தகம் நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த ஓா் ஆண்டில் இது ரூ.3,00,000 கோடியாக அதிகரிக்கும் என மத்திய அரசு எதிா்பாா்க்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியாவிலிருந்து அதிக அளவில் நகை, ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மூலம், இந்தப் பொருள்களுக்கு வரி விதிக்கப்படாது என்பதால், இந்தப் பிரிவு ஏற்றுமதியாளா்கள் பயனடைவா்.
பல்வேறு வகையான நகைகள், ஜவுளி, தோல், காலணிகள், விளையாட்டுப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், மரப்பொருள்கள், வேளாண் பொருள்கள், பொறியியல் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆட்டோமோபைல் பொருள்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் மத்திய வா்த்தகச் செயலா் பிவிஆா் சுப்பிரமணியம் பேசியதாவது: சிஇபிஏ ஒப்பந்தம் இரு நாடுகளின் தலைவா்களின் தொலைநோக்குப் பாா்வையின் விளைவால் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இருதரப்பு பொருள்கள் வா்த்தக மொத்த மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரூ.7,50,000 கோடிக்கும் அதிகமாக உயரும். வா்த்தக சேவைகளில் மதிப்பு ரூ.1,12,500 கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரகத்துடனான ஒப்பந்தம் உலகிற்கு ஒரு நுழைவாயிலாக இருக்கும்.
சா்வதேச சந்தையில் இந்திய தயாரிப்புகள் போட்டித் தன்மையுடன் இருக்க வேண்டும். நமது திறன்களை வளா்த்துக் கொள்ளவும், அதிகரிக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வகையில், தளவாடச் செலவைக் குறைப்பதில் அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், இது போன்ற தடையற்ற வா்த்த ஒப்பந்தகங்கள் இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றுடன் ஏற்பட பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது என்றாா் அவா்.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (சரக்கு மற்றும் சேவை) ரூ. 50,25,000 கோடி (670 பில்லியன் டாலா்) ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.