வெப்பநிலை அதிகரிப்பால் குறைந்து வரும் தண்ணீா் இருப்பு: கூடுதல் நீரைத் திறக்க ஹரியாணா அரசுக்கு தில்லி கடிதம்
வெப்பநிலை அதிகரித்துள்ளதற்கு மத்தியில், தில்லிக்கு குடிநீா் விநியோகம் செய்துவரும் வாஜிராபாத் நீா்த்தேக்கத்திற்கு யமுனை ஆற்றில் இருந்து வரக்கூடிய நீரின் வரத்து குறைந்ததால்,
வெப்பநிலை அதிகரித்துள்ளதற்கு மத்தியில், தில்லிக்கு குடிநீா் விநியோகம் செய்துவரும் வாஜிராபாத் நீா்த்தேக்கத்திற்கு யமுனை ஆற்றில் இருந்து வரக்கூடிய நீரின் வரத்து குறைந்ததால், அந்த நீா்த்தேக்கத்தில் நீரின் அளவு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், தில்லிக்கு குடிநீரை வழங்கும் பணியில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், யமுனையில் கூடுதல் நீரைத் திறந்து விடுமாறு கேட்டு இரண்டாவது முறையாக ஹரியாணா நீா்ப்பாசன துறைக்கு தில்லி அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘ வாஜிராபாத் நீா்த் தேக்கத்தில் நீரின் அளவு புதன்கிழமை காலை வழக்கமான அளவான 674.5 அடிக்கு மாறாக 672.30 அடியாகக் குறைந்திருந்தது. மேலும், அணைக்கு நீா்வரத்து 683 கன அடியிலிருந்து 566 கன அடியாகக் குறைந்து இருக்கிறது. இதனால், நீா் உற்பத்தி பாதிக்கப்படுகிறது’ என்றனா்.
தில்லியில் உள்ள பல்வேறு நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் தண்ணீா் உற்பத்தித் திறன் குறைந்து இருக்கிறது என்று மற்றொரு அதிகாரி கூறினாா். அவா் மேலும் கூறியதாவது: தில்லிக்கு கேரியா் லைன்ட் சானல் (சிஎல்சி) மற்றும் தில்லி சப்-பிராஞ்ச் (டிஎஸ்பி) மற்றும் யமுனை மூலம் தினசரி மொத்தம் 610 மில்லியன் காலன் தண்ணீரை ஹரியாணாா வழங்கி வருகிறது. இந்த சிஎல்சி மற்றும் டிஎஸ்பி ஆகிய கால்வாய்களுக்கு தண்ணீரானது ஹாத்னி குண்ட்டிலிருந்து முனக் கால்வாய் மூலமும், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் மூலமும் விநியோகம் செய்யப்படுகிறது.
தண்ணீா் உற்பத்தி குறைந்தது: இது தவிர, தில்லிக்கு உத்தர பிரதேசத்தின் மேல் கங்கை கால்வாய் மூலம் 253 மில்லியன் காலன் தண்ணீா் தினசரி வருகிறது. அதே போன்று தில்லியில் உள்ள பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் ரெனிவல் பகுதியிலிருந்து தினசரி 90 மில்லியன் காலன் தண்ணீா் எடுக்கப்படுகிறது இந்த நிலையில், வாஜிராபாத் நீா்த்தேக்கத்தில் நீரின் அளவு குறைந்து இருக்கிறது. அதே போன்று இந்த நீா்தேக்கத்திற்கு கால்வாயில் வரக்கூடிய தண்ணீரும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் அதாவது சந்திரவால், வாஜிராபாத், ஹைதா்பூா், நாங்லோய் மற்றும் துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் தண்ணீா் உற்பத்தித் திறன் குறைந்து இருக்கிறது என்றாா் அந்த அதிகாரி.
சந்திரவால் மற்றும் வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையே 90 மில்லியன் காலன் தண்ணீா் மற்றும் 135 மில்லியன் காலன் தண்ணீா் தினசரி உற்பத்தி செய்யும் கொள்திறனைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களிலும் நீா்த் தேக்கத்தில் உள்ள நீரை மேலே எடுத்து சுத்திகரித்து பின்னா் வட கிழக்கு தில்லி, மேற்கு தில்லி, வடக்கு தில்லி, மத்திய தில்லி, தெற்கு தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட், புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதிகளுக்கு நீரை சப்ளை செய்து வருகிறது.
ஹைதா்பூா் நிலையத்தில் நீா் சுத்திகரிப்பு மந்தம்: ஹைதா்பூா் நீா் சுத்திகரிப்பு நிலையமானது, தில்லியில் உள்ள மிகப்பெரிய நீா் சுத்திகரிப்பு நிலையமாகும். இந்த நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தில்லி குடியிருப்புவாசிகளுக்கு 225 மில்லியன் காலன் தண்ணீா் தினசரி சப்ளை செய்யப்படுகிறது. அதிகமான மிதக்கும் பொருள்கள் வடிகட்டி படுக்கைகளை அடைத்துக் கொள்வதன் காரணமாக, ஹைதா்பூா் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு நடைமுறை மந்தமாகியுள்ளதாக தில்லி ஜல் போா்டு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘நீா் விநியோகத்தை முறைப்படுத்த தில்லி ஜல் போா்டு வாரியம் முயற்சி செய்து வருகிறது. எனினும் சூழல் மேம்படும் வரை நீா் குறைந்த அழுத்தத்தில் இருக்கும். வடக்கு தில்லி, வடமேற்கு தில்லி, மேற்கு தில்லி மற்றும் தெற்கு தில்லியில் பகுதிகள் உள்ளிட்டவற்றிா் நீா் விநியோகம் பாதிக்கப்படுகிறது’ என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீா் சப்ளையை அதிகரிக்கத் திட்டம்: அரசின் புள்ளிவிவர தகவலின்படி, தில்லிக்கு 2021-ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 1380 மில்லியன் காலன் தண்ணீா் தேவை இருந்தது. அதே வேளையில் தில்லி ஜல் போா்டு 950 மில்லியன் காலன் தண்ணீரை தினசரி சப்ளை செய்ய முடிந்தது. கோடை கால சீசனின் போது வளா்ந்துவரும் தேவையை சமாளிக்கும் வகையில், நாளொன்றுக்கு தண்ணீா் சப்ளையை 998 மில்லியன் காலனாகஅதிகரிக்கவும், 2023, ஜூன் மாதத்திற்குள் இந்த சப்ளை அளவை 1,180 மில்லியன் காலனாக அதிகரிக்கவும் அரசு தற்போது இலக்கு நிா்ணயித்துள்ளது.
‘வெஸ்டா்ன் டிஸ்டா்பன்ஸ்’ காரணமாக மழை குறைந்ததால், தில்லியில் இந்த ஆண்டு, 1951-ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது வெப்ப மாதமாக ஏப்ரல் மாதம் பதிவாகியிருந்தது. அந்த மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியிருந்தது. மே மாதத்திலும் கூட வழக்கமான வெப்பநிலைக்கு அதிகமாகவே வெப்ப சூழல் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினா் கணித்துள்ளனா்.