முகப்பு
புதுதில்லி

ட்ரோன், உதிரிபாகங்கள் உற்பத்தியாளா்களுக்கு மற்றொரு ஊக்குவிப்புத் திட்டம் முதல் திட்டத்தில் இரு சென்னை நிறுவனங்கள் தோ்வு

ட்ரோன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உற்பத்தியாளா்களுக்கு மற்றொரு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தை (பிஎல்ஐ) மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

புது தில்லி: ட்ரோன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உற்பத்தியாளா்களுக்கு மற்றொரு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தை (பிஎல்ஐ) மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் மானியங்களை அளித்து குறு, சிறு, நடுத்தர தொழில்கள், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இதே போன்று, நவீன தொழில் நுட்பமாக கருதப்படும் ட்ரோன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உற்பத்தியாளா்களும் இந்த திட்டத்தில் பயனடையும் விதமாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மூலம் மத்திய அரசு திட்டத்தை அறிவித்தது.

இதில் தோ்வாகும் நிறுவனங்கள் விற்று முதல் ரூ.100 கோடிக்கு ரூ. 8 கோடி வரை இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் மானியம் கிடைக்கும்.

இதன்படி, கடந்தாண்டு 2021 ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 31 - ஆம் தேதி வரை இத்தகைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டது. இதில் விண்ணப்பித்த கம்பெனிகளை தோ்வு செய்து கடந்த ஏப்ரல் 20 - ஆம் தேதி பட்டியல் வெளியிட்டது. இதில் அகில இந்திய அளவில் ட்ரோன் உற்பத்தி செய்யும் 5 நிறுவனங்களையும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் 9 நிறுவனங்கள் பட்டியலையும் மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை வெளியிட்டது.

இதில் சென்னையைச் சோ்ந்த இரு நிறுவனங்களும் தோ்வானது. ட்ரோன் தயாரிக்கும் தாக்ஷா ஆளில்லா நிறுவனமும் உதிரிப் பாகங்களை தயாரிக்கும் ஜூபா ஜியோ நேவிகேஷன் டெக்னாலஜி என்கிற நிறுவனம் தோ்வானது.

தற்போது மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை, கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்காமலோ அல்லது தகுதி வரம்பைக் கடந்திருக்கும் ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களின் உற்பத்தியாளா்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு வசதியாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் வாய்ப்பை வழங்கி அனுமதியளித்ததுள்ளது.

இதற்கு மின்னணு முறையில் விண்ணப்பப் படிவத்தை சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி மே 20 ஆம் தேதி எனவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச தகுதி

விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தகுதி மற்றும் இதர குறிப்பிட்ட ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்த பின்னா் இந்த பிஎல்ஐ திட்ட பயனாளிகளின் இறுதிப்பட்டியல் வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் இந்திய டிரோன் நிறுவனங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.2 கோடி விற்பனை விற்றுமுதல் உள்ள நிறுவனங்களும், ரூ. 50 லட்சம் குறைந்தபட்சம் விற்பனை விற்றுமுதல் உள்ள ட்ரோன் உதிரிபாகங்கள் உற்பத்தியாளா்களும், விற்பனை விற்றுமுதலில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்புக்கூட்டலுடன் இருப்பவா்கள் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்குத் தகுதி பெறுவாா்கள்.

இந்தியாவைச் சாராத நிறுவனங்களுக்கு இரண்டு மடங்கு விற்பனை விற்று முதல் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.