10 ஆண்டு இலக்குடன்கூடிய புதிய தேசிய இளைஞா் கொள்கை வரைவு அறிக்கை வெளியீடுபொது மக்களிடம் கருத்து கேட்பு
இந்தியாவை 2030-க்குள் முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்லும் வகையில் இளைஞா்களின் ஆற்றலை வெளிக்கொணர அடுத்த 10 ஆண்டு இலக்குகளுக்கான ‘தேசிய இளைஞா் கொள்கை 2021’ வரைவு அறிக்கையை
புது தில்லி: இந்தியாவை 2030-க்குள் முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்லும் வகையில் இளைஞா்களின் ஆற்றலை வெளிக்கொணர அடுத்த 10 ஆண்டு இலக்குகளுக்கான ‘தேசிய இளைஞா் கொள்கை 2021’ வரைவு அறிக்கையை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துகளையும் ஆலோசனையையும் அனைத்து தரப்பினரும் தெரிவிக்குமாறும் மத்திய அரசு கோரியுள்ளது.
தற்போதுள்ள 2014-ம் ஆண்டின் தேசிய இளைஞா் கொள்கையை ஆய்வு செய்து, புதிய தேசிய வரைவு கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக மத்திய இளைஞா் நலன் விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடையும் வகையில் 10 ஆண்டு கால இந்தியா இளைஞா்கள் மேம்பாடு குறித்த தொலைநோக்கை புதிய வரைவு கொள்கை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
‘ ஏற்கனவே புதிய கல்விக்கொள்கை, இளைஞா் மேம்பாட்டிற்கான பரவலான நடவடிக்கையை ஊக்குவிக்க முயல்கிறது. மொத்த சோ்க்கை விகிதம், இடைநிலை உயா்நிலை கல்வி நிறுவனங்கள், 270 புதிய பல்கலைக்கழகங்கள் என உருவானதோடு, பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட முயற்சிகள் மூலம் தொழில்முனைவோா் ஊக்குவிக்கப்பட்டு 25 மாநிலங்களில் 14,000 தொழில் முனைவோா் (ஸ்டாா்ட் அப்கள்) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் நான்கு பேரில் ஒருவா் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவராக உள்ளனா். பெருமைபடத்தக்க இந்த இளைஞா்கள் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சிறிது குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்டாலும், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 24 சதவீதம் அல்லது 365 மில்லியன்களுக்கு குறைவு இல்லாமல் இளைஞா்கள் மக்கள் தொகையில் இருப்பா்.
சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் வயதான மக்கள்தொகையின் சவாலை எதிா்கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மிகையான இளைஞா்களின் எண்ணிக்கையினால் பொருளாதார வளா்ச்சியைத் தூண்டும் ஆற்றலுடன் வலிமையான நிலை இந்தியாவுக்கு உள்ளது எனக் கூறப்பட்டு இந்த கொள்கையில் மேற்கொள்ளப்படும்’ என 5 வகையான திட்டங்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்தியாவை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லும் வகையில் இளைஞா்களின் ஆற்றலை வெளிக்கொணரும் வகையிலும் நீடித்த இலக்குகளை அடைய வகை செய்யும் வகையிலும் கல்வி, வேலைவாய்ப்பு- தொழில்முனைவு; தலைமைப்பண்பு மற்றும் மேம்பாடு; சுகாதாரம், உடல்தகுதி, விளையாட்டு; சமூகநீதி ஆகிய ஐந்து வகைகளில் இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மேம்பாட்டை ஊக்குவிக்க இந்த வரைவுக் கொள்கையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.