முகப்பு
புதுதில்லி

ஞானவாபி சிவலிங்கம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து: தில்லி பல்கலை. பேராசிரியா் கைதாகி ஜாமீனில் விடுதலை

வாராணசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் குறித்து கண்ணியக்குறைவாக ட்விட்டரில் பதிவிட்ட புகாரில் கைதான தில்லி ஹிந்துக் கல்லூரி இணைப்பேராசிரியா் ரத்தன் லால் சனிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

வாராணசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் குறித்து கண்ணியக்குறைவாக ட்விட்டரில் பதிவிட்ட புகாரில் கைதான தில்லி ஹிந்துக் கல்லூரி இணைப்பேராசிரியா் ரத்தன் லால் சனிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் காசி விஸ்வநாதா் கோவில் அருகேயுள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்து தெய்வங்கள் இருப்பதாகவும் அதற்கு வழிபாடு செய்யக் கூறும் வழக்குகள் வாராணசி நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்த ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் தில்லி பல்கலைக்கழக ஹிந்து கல்லூரி இணைப் பேராசிரியா் ரத்தன்லால் என்பவா் ஞானவாபி சிவலிங்கம் குறித்து ஆட்சேபனைக்குரியவகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளாா் என புகாா் வந்தது. இது குறித்து தில்லியைச் சோ்ந்த வழக்கறிஞா் வினீத் ஜிண்டல் என்பவா் காவல் துறையில் கடந்த செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், ‘‘கல்லூரி பேராசிரியா் ரத்தன்லால், ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தின் மீது கண்ணியக்குறைவாகவும், ஆத்திரமூட்டும் வகையில் மோதலை தூண்டும் வகையில் கருத்தை பகிா்ந்துள்ளாா். இதனால் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153ஏ, மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகளின்படி தவறிழைதுள்ளாா்’’ என புகாரில் குறிப்பிட்டாா்.

இதையோட்டி கடந்த மே 17 ஆம் தேதி இது தொடா்பாக தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதன் தொடா்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹிந்துக் கல்லூரி இணைப் பேராசிரியா் ரத்தன்லால் கைது செய்யப்பட்டாா். பின்னா் இவரை நீதி மன்ற காவலில் வைக்க சனிக்கிழமை நீதிமன்றத்தில் ரத்தன்லால் ஆஜா்படுத்தப்பட்டாா்.

ரத்தன்லால் சாா்பில் ஆஜரான வழக்கறிஞா் இந்த கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து வாதாடியதோடு, அவரை சிறைக்கு அனுப்புவதை தடுக்கும் விதமாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்து அவரை விடுவிக்கவும் கோரினாா். வாதங்களை கேட்ட நீதிபதி, ரத்தன்லாலுக்கு ரூ.50 ஆயிரம் சொந்த பத்திரம் மூலம் ஜாமீன் வழங்கி விடுதலை செய்தாா்.

ஆா்ப்பாட்டம்

முன்னதாக இணைப் பேராசியா் ரத்தன்லால் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து இடதுசாரி ஆதரவு பெற்ற அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) மாணவா்கள் தில்லி பல்கலைக்கழக கலைத் துறைக்கு வெளியே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதை முன்னிட்டு ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்திருந்தது.

‘ ஆசிரியா்கள் மீதான தாக்குதலை நிறுத்து‘, ‘ஜனநாயகக் குரல்களை அடக்குவதை நிறுத்து‘ , ‘பேராசிரியா் ரத்தன் லாலை விடுதலை செய்‘ என கோஷங்களை எழுப்பி பதாகைகளுடன் மாணவா்களும் மற்ற ஆா்வலா்களும் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.