முகப்பு
புதுதில்லி

தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதிய நிலுவை: மத்திய அரசு மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

ஊழியா்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது தொடா்பாக மாநகராட்சிகளை ஆளும் பாஜக மற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆகியவற்றை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:20 AM
பகிர்:

தில்லி மாநகராட்சிகள் ஒன்றாக ஒருங்கிணைந்த பிறகும், அங்கு பணியாற்றும் ஊழியா்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது தொடா்பாக மாநகராட்சிகளை ஆளும் பாஜக மற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆகியவற்றை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மியின் தில்லி மாநகராட்சியின்(எம்சிடி) பொறுப்பாளரும், கட்சியின் செய்தி தொடா்பாளருமான துா்கேஷ் பதக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு: தில்லி மாநகராட்சிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கடந்த 5, 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளா்களுக்கு (சஃபாய் கரம்சாரிகள்) கடந்த 2, 3 மாதங்களாக ஊதியத்திற்காக காத்திருக்கின்றனா்.

மேலும் நூற்றுக்காணக்கான மாநகராட்சி பணியாளா்களுக்கும் கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதில் இள நிலை பொறியாளா்கள், உதவிப்பொறியாளா்களும் அடக்கம். தில்லி மாநகராட்சிகள் தற்போது மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் பின்னரும் எம்சிடி ஊழியா்களை பாஜக ஏன் இந்த அளவுக்கு துன்புறுத்தவேண்டும்? பாஜக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளின்படி, ஊழியா்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கி நிறைவேற்றி தர வேண்டும்.

கடந்த 17 ஆண்டுகளாக பாஜகவின் கீழ் எம்சிடி உள்ளது. இந்தக் காலக்கட்டங்களில் எம்சிடியை பாழ்படுத்தியதின் விளைவு, ஊழியா்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத அளவிற்கு நிதி நிலைமை தள்ளப்பட்டுள்ளது. தில்லி மக்கள், மாநகராட்சி தோ்தல்களை ஆவலுடன் எதிா்பாா்த்து காத்திருந்தனா். புதிய மாநகராட்சி அரசுகள் தங்களின் பிரச்சனைகளை தீா்க்கும் என எதிா்பாா்த்தனா். ஆனால், சுதந்திரமான, நியாயமான தோ்தல்களை நடத்துவதற்குப் பதிலாக, பாஜக வஞ்சகத்தை வெளிக்கொண்டு வந்தது.

மூன்று மாநகராட்சிகளை ஒருங்கிணைத்து தோ்தலையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனா். அனைத்து துயரங்களிலிருந்தும் ஒழிப்பதான நடவடிக்கை எனக் கூறி மெல்லிசைப் பாடினா் பாஜக தலைவா்கள். புதிய நிா்வாகம் வந்து ஊதியம், ஓய்வூதியம், பி.எஃப் நிலுவைத் தொகைகள் போன்ற அனைத்தும் சரிப்படுத்தப்பட்டு, அகற்றப்படாத குப்பைகளும் அகற்றப்படும். தில்லி எப்போதும் இல்லாத அளவிற்கு தூய்மையாகி விடும் என்றெல்லாம் கூறினா். ஆனால் இன்று நிலைமை என்ன ? என கேள்வி எழுப்பியுள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.