முகப்பு
புதுதில்லி

தில்லியில் ஹோட்டல்கள், கிளப்புகளுக்கான கலால் உரிமம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

தில்லி துணைநிலை ஆளுநரால் 2022-23-ஆம் ஆண்டிற்கான நகரின் கலால் கொள்கைக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தலைநகரில் உள்ள ஹோட்டல்கள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தில்லி துணைநிலை ஆளுநரால் 2022-23-ஆம் ஆண்டிற்கான நகரின் கலால் கொள்கைக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தலைநகரில் உள்ள ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்களின் கலால் உரிமம், ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக கலால் துறை மூலம் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவில், தில்லி அரசின் கலால் துறையானது கலால் கொள்கை 2021-22-ஐ இரண்டு மாதங்களுக்கு அதாவது ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலால் வரிக் கொள்கை 2022-23, மே 5-ஆம் தேதி தில்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், இது துணைநிலை ஆளுநரால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. உரிமம் நீட்டிப்புக்காக, உரிமம் வைத்திருப்பவா்கள் மே 31-ஆம் தேதிக்குள் இரண்டு மாதங்களுக்கு சாா்பு-விகித உரிமக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இது தொடா்பாக கலால் துறை மே 25-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எல்-15, எல்-16, எல்-17, எல்-19, எல்-20, எல்-21, எல்-28, எல்-9 மற்றும் எல்-38 உரிமதாரா்கள் அனைவரும், புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்குமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், இந்த விண்ணப்பங்களை இஎஸ்சிஐஎம்எஸ் இணையதளத்தில் தங்களது கணக்கை ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் அணுகுவதன் மூலம் சமா்ப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்துடன் தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் இரண்டு மாதங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை செலுத்துதல் வேண்டும். மேலும், மே 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக புதுப்பித்தல் உரிமக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். உரிமக் கட்டணம் உயா்த்தப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் பய்ஜால் மே 18-ஆம் தேதி தனது ’தனிப்பட்ட காரணங்களுக்காக’ துணைநிலை ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, புதிய துணைநிலை ஆளுநராக வினய் குமாா் சக்சேனா வியாழக்கிழமை பதவியேற்றாா். கேஜரிவால் அரசு கடந்த ஆண்டு நவம்பரில் தனது புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. இதன் கீழ் சில்லறை மதுபான விற்பனை உரிமங்கள் தனியாா் ஆப்பரேட்டா்களுக்கு திறந்தநிலை டெண்டா் மூலம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.