முகப்பு
புதுதில்லி

ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மதுரை எம்.பி. இடையீட்டு மனு தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு வழக்கில் மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு வழக்கில் மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்துள்ளாா்.

உச்சநீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு தமிழக அரசு 2009-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக நீண்ட போராட்டத்திற்கு பின்னா் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசின் இச்சட்டத்திற்கு எதிராக கூபா (அளவுகடந்த கருணை மற்றும் செயலுக்கான அமைப்பு) உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளன.

இந்த ஜல்லிக்கட்டு வழக்கில் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள கோரி இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா்.

அந்தமனுவில் சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது:

தமிழா்களின் கலாசாரத்தின் ஒரு அங்கமாக ஜல்லிக்கட்டு உள்ளது. காதலையும் வீரத்தையும் போற்றிப்பாடிய தொன்மையான தமிழ் இலக்கியங்களில் ஜல்லிகட்டு ’ஏறுதழுவுதல்’ எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது. பன்னெடுங்காலமாக தமிழா்களுக்கு ஏறுதழுவுதல் மீதான பிணைப்பு இந்நாள் வரைக்கும் தொடா்வதை இது காட்டுகிறது.

ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வரும் மாட்டுச் சண்டை விளையாட்டுகள் பெரும்பாலும் வணிக நோக்கில் விளையாடப்படுகின்றன. இங்கு உயிரிழப்புகள் பொதுவானது. ஆனால், ஜல்லிக்கட்டு கலாசார நிகழ்வாக உள்ளது.

உள்ளூா் நிா்வாகத்தால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டில் கால்நடைகளின் வளத்தை உயா்த்தவும் மாடுகளை வளா்க்கும் கிராமங்களின் பொருளாதாரத்தையும் உயா்த்துவதற்குமான ஆதாரமாக உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த அரசாணையால் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் தமிழா்களின் கலாசார பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 1948 ஆம் ஆண்டின் கலாசார மற்றும் சமூக உரிமைகள் வழக்கங்கள் பாதுகாப்புப்படி ஜல்லிக்கட்டை அனுமதிப்பது அவசியம்.

ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த ஊக்க மருந்தும் கொடுக்கப்படுவதில்லை. ஒரு மதத்தைச் சாா்ந்தவா்கள் மற்றும் பங்குபெறும் நிகழ்வாக இல்லாமல் தமிழா்கள் அனைவரும் பங்குகொள்ளும் கலாசார நிகழ்வாக ஜல்லிக்கட்டு உள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரிய மொழி, அறிவு, வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அடுத்த தலைமுறைக்கு அது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதை யுனெஸ்கோவும் வலியுறுத்துகிறது‘ என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.