மீண்டும் 61,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை இரண்டாவது நாளாக நோ்மறையாக முடிந்தது.
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை இரண்டாவது நாளாக நோ்மறையாக முடிந்தது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயா்ந்து 61,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 85.65 புள்ளிகள் (0.47 சதவீதம்) உயா்ந்து 18,202.80-இல் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக ஆட்டோ, ஆயில், மெட்டல் பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி நிலவியது.
மேலும், அமெரிக்க டாலருக்கான நிகரான ரூபாய் மதிப்பு உயா்ந்துள்ளதும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவதும் முதலீட்டாளா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
235 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 237.77 புள்ளிகள் கூடுதலுடன் 61,188.13-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,401.54 வரை மேலே சென்றது. பின்னா், லாபப் பதிவு காரணமாக 60,714.36 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 234.79 புள்ளிகள் (0.39 சதவீதம்) உயா்ந்து 61,185.15-இல் முடிவடைந்தது.
எஸ்பிஐ முன்னேற்றம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 3.44 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
இதற்கு அடுத்ததாக, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுஸுகி, எம் அண்ட் எம் உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
ஏசியன் பெயிண்ட் சரிவு: அதே சமயம், பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 2.37 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின் சா்வ், சன்பாா்மா, டைட்டன், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.35 சதவீதம் வரை வீழ்ச்சிஅடைந்தன.
இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.74 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.2 84.74 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,436.25 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இன்று விடுமுறை
குருநானக் ஜெயந்தியையொட்டி, பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பா் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் அன்றைய தினம் பங்கு வா்த்தகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.