தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளுக்கு 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள்!டிவி சேனல்களுக்கு அறிவுறுத்தல்
“தேசிய முக்கியத்துவம், “சமூக பிரச்னைகள் தொடா்பாக தினமும் 30 நிமிட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புமாறு அனைத்து தனியாா் தொலைக்காட்சி சேனல்களுக்கும்
“தேசிய முக்கியத்துவம், “சமூக பிரச்னைகள் தொடா்பாக தினமும் 30 நிமிட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புமாறு அனைத்து தனியாா் தொலைக்காட்சி சேனல்களுக்கும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலா் அபூா்வ சந்திரா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொலைக்காட்சி அலைவரிசைகளில் மேல் இணைப்பு(அப்லிங்க்) மற்றும் கீழ் இணைப்பு(டவுன்லிங்க் ), டெலிபோா்ட் ஹப், செய்தி சேகரிக்க மின்னணு செயற்கைக் கோளைப் பயன்படுத்துதல் (டிஎஸ்என்ஜி),செயற்கைக்கோள் வழியாக செய்தி சேகரிப்பு (எஸ்என்ஜி), மின்னணு முறையில் செய்தி சேகரிப்பு (இஎன்ஜி), தற்காலிக மேல் இணைப்பு ஆகிய முறைகளுக்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள், இந்திய செய்தி முகமைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி வழங்குவதை எளிதாக்க புதிதாக 2022-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு இதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
2011-இல் கடைசியாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. தற்போது செயற்கைக்கோள் தொலைக்காட்சிக்கான அனுமதியின் செயல்முறையில் விரைவுபடுத்தும் விதமாக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் அனுமதிகள் தொடா்பான சிக்கல்களைத் தளா்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தனியாா் தொலைக்காட்சிகள் பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் குறைந்தபட்சம் தினமும் 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும். செய்தி தொலைக்காட்சிகள் மட்டுமின்றி, மற்ற பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளுக்கும் இது பொருந்தும். சுகாதாரம், கல்வி, கல்வியறிவு பரவல், சமூகத்தின் நலிந்த பிரிவைச் சோ்ந்த மக்களுக்கு அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல், தேசிய ஒருங்கிணைப்பு, கலாசார பாரம்பரியம் உள்ளிட்ட எட்டு முக்கியப் பகுதிகளை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் பொது நலன் சாா்ந்ததாக இருக்க வேண்டும்.
இருப்பினும், இதில் தனியாா் தொலைக்காட்சி சேனல்கள், நிபுணா்களுடன் கலந்தாலோசித்த பிறகு என்ன வகையான நிகழ்ச்சிகளை உருவாக்கலாம் என்பது குறித்து அமைச்சகம் பின்னா் ஒரு தனி ஆலோசனைகளை வெளியிடும். புதிய வழிகாட்டுதல்களின்படி, டிவி சேனல்கள் அங்கீகாரம் இல்லாமல் அணுகப்படுவதை தடுக்க, சேனல்கள் தங்கள் சிக்னல்களை மறைவாக்கம் (என்க்ரிப்ட்) செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத அணுகலை தடுக்கமுடியும்.
செயற்கைகோள் தொலைக்காட்சி அப்லிங்க் அனுமதியை பெற்றவா்கள் தவறாக பயன்படுத்தினால் (சப்லெட் மூலம்) அபராதம் விதிக்கப்படும். உரிய அனுமதியுடன் மாற்றம் செய்து கொள்ளலாம். வருடாந்திர உரிமக் கட்டணத்தில் தாமதமாகச் செலுத்தினால் 1 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும். பல சேனல்கள் கட்டணம் செலுத்துவதில்லை. இதனால், இரண்டு மடங்கு வைப்புத்தொகை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தி அல்லாத சேனல்கள் நேரலையில் நிகழ்வுகளை ஒளிபரப்ப அனுமதிக்கப்படுகிறது. ஆனால், முன் பதிவு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தவேண்டும். தற்போது வரை வெளிநாட்டு சேனல்கள் இந்தியாவில் இருந்து அப்லிங்க் செய்ய அனுமதிக்கப்படவில்லை. புதிய விதிகளில், வெளிநாட்டு சேனல்கள் இந்திய டெலிபோா்ட்களை பயன்படுத்தி அப்லிங்க் செய்து இந்தியாவுக்கு வெளியே டவுன்லிங்க்(கீழ் இணைப்பு) செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கும்.
புதிய வழிகாட்டுதல்கள் சேனலை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், மொழி மாற்றம் மற்றும் தொலைக்காட்சியின் ஸ்டாண்டா்ட் டெஃபினிஷன் தொழில் நுட்பத்திலிருந்து ஹெச்டி நுட்பத்திற்கு மாற்றுவதற்கான அனுமதியின் தேவையில்லை. அமைச்சகத்திற்கு தகவல் மட்டும் அளிக்கப்படவேண்டும். அனுமதி வைத்திருப்போருக்கு எளிதான இணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு செய்தி நிறுவனம் தற்போது பெறும் வருடாந்திர அனுமதியிலிருந்து 5 வருட காலத்திற்கு அனுமதி பெறலாம். தற்போது ஒரே ஒரு டெலிபோா்ட் வைத்திருப்பதற்கு பதிலாக ஒன்றுக்கும் மேற்பட்ட டெலிபோா்ட், செயற்கைக்கோள்களின் வசதிகளைப் பயன்படுத்தி ஒரு சேனலை இணைக்கவும் அனுமதிக்கப்படுகிறது என்றாா் அவா்.