முகப்பு
புதுதில்லி

நேரடி வரி வசூல் கடந்த ஆண்டை விட 23.8% அதிகரிப்பு

மத்திய அரசின் நேரடி வரி வருவாய் நிகழாண்டில் நிலையான வளா்ச்சியுடன் அக்டோபா் 8 -ஆம் தேதி வரை மொத்தம் ரூ. 8.98 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

மத்திய அரசின் நேரடி வரி வருவாய் நிகழாண்டில் நிலையான வளா்ச்சியுடன் அக்டோபா் 8 -ஆம் தேதி வரை மொத்தம் ரூ. 8.98 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 23.8 சதவீத வளா்ச்சி எனவும் நிகழாண்டு வசூல் இலக்கில் 52 சதவீதம் பூா்த்தியடைந்துவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரடி வரி வசூலில் பெருநிறுவனம், தனிநபா் வருவாய் வரி வசூலும் அடங்கும். தனிநபா் வருமான வரியில் (பங்குப் பரிவா்த்தனை வரி உள்பட) 32 சதவீத வளா்ச்சியும், பெருநிறுவன வரி வருவாய் 16.73 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சத்தின் வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

வரி வருவாய் வசூல் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது. தற்போது நாட்டில் தொழில் துறை உற்பத்தி, ஏற்றுமதியில் மந்தநிலை ஏற்பட்டு பொருளாதார வளா்ச்சி வேகத்தை இழந்தாலும், தனிநபா் நேரடி வரி வசூல் வலுவாக இருப்பதற்கு பெருநிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளதே காரணம் என சில ஆய்வாளா்கள் கூறியுள்ளனா்.

நேரடி வரி வசூல் குறித்து நிதியமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்டு புள்ளிவிவரங்கள் வருமாறு: நேரடி வரியில் கூடுதலாக செலுத்தியவா்களுக்கு ரூ. 1.53 லட்சம் கோடி திரும்பச் செலுத்தப்பட்ட வரி போக நிகழாண்டின் ஏப்ரல் 1 முதல் அக்டோபா் 8 வரை நிகர நேரடி வரி வசூல் ரூ. 7.45 லட்சம் கோடியாகும்.

இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தைவிட 16.3 சதவீதம் கூடுதலாகும். தனிநபா் வசூலிலும், பெருநிறுவன நேரடி வருவாய் வரி வசூலையும் தனித்தனியாக ஒப்பிட்டால் முறையே 16.25 சதவீதம், 16.29 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2022-23-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பின்படி முழு ஆண்டு வரி வசூல் இலக்கில் 52.46 சதவீதம் தற்போது பூா்த்தியாகியுள்லது எனவும் தெரிவித்துள்ளது.

2021-22 நிதியாண்டில் ரூ.14.10 லட்சம் கோடி நேரடி வரி வசூலானது. இந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என நிகழ் நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.