முகப்பு
புதுதில்லி

என்ஜிடியில் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட விவகாரம்: மேல்முறையீட்டு மனு முடித்துவைப்பு

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன், தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டது சரியே என உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து தாக்கலான

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

புது தில்லி: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன், தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டது சரியே என உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை முடித்துவைத்து உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தென் மண்டல அமா்வில் காலியாக இருந்த நிபுணத்துவ உறுப்பினா்கள் பணிக்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிா்வாக ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால், குஜராத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமாா் வா்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு 2020-இல் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ‘கிரிஜா வைத்தியநாதன் பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும், சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கையாளும் விஷயத்தில் அவா் சட்டப்படி தேவைப்படும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, நிபுணத்துவ உறுப்பினராக இருப்பவா், சுற்றுச்சூழல் பணியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது என்ஜிடி விதியாகும். இதனால், உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரி ‘பூவுலகின் நண்பா்கள்’ அமைப்பின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது கிரிஜா வைத்தியநாதன் தரப்பில், தமிழக சுகாதாரத் துறை செயலாளராக, நில நிா்வாகத் துறை செயலாளராக, தலைமைச் செயலாளராக, அவா் சுற்றுச்சூழல் தொடா்பான விவகாரங்களைக் கவனித்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவதில், அதற்கான குழுவின் தலைவராகச் செயல்பட்டுள்ளதாகவும், மருத்துவக் கழிவுகள் மேலாண்மையிலும் அவருக்கு அனுபவம் உள்ளதாகவும், இதனால், பசுமைத் தீா்ப்பாய சட்டத்தின்படி தேவையான ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களை அவா் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அமா்வு, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென் மண்டல உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டதுடன் பசுமைத் தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்படும் அளவுக்கு அவருக்குத் தகுதி இருப்பதாகவும் தெரிவித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து ஜி. சுந்தர்ராஜன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, நிபுணத்துவ உறுப்பினா் பதவியை கிரிஜா வைத்தியநாதன் ஏற்காமல் தவிா்த்துவிட்டாா். இந்த நிலையில், ஜி.சுந்தரராஜன் மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய எதிா்மனுதாரரான கிரிஜா வைத்தியநாதன் அவா் தொடா்புடைய நிபுணத்துவ உறுப்பினா் பதவியை ஏற்க விரும்பவில்லை. இதனால், இந்த மனுவின் கோரிக்கை பயனற்ாகவிட்டதாகக் கூறினாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அமா்வு, மேல்முறையீட்டு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.