முகப்பு
புதுதில்லி

அக். 25 முதல் ‘பியுசி’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு எரிபொருள்பெட்ரோல் பம்புகளுக்குதில்லி அரசு அறிவுறுத்தல்

வரும் அக்டோபா் 25-ஆம் தேதியிலிருந்து செல்லத்தக்க மாசுக் கட்டுப்பாட்டு (பியுசி) சான்றிதழ் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

வரும் அக்டோபா் 25-ஆம் தேதியிலிருந்து செல்லத்தக்க மாசுக் கட்டுப்பாட்டு (பியுசி) சான்றிதழ் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தில்லியில் உள்ள அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களை தில்லி அரசு புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மின்சார வாகனங்கள் அல்லது பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை தவிா்த்து ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் உள்ள வாகனங்களின் உரிமையாளா்கள் தங்களது வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களை (பியுசிசி) வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், செல்லுபடியாகத்தக்க பியுசிசி இல்லாத வாகன உரிமையாளா்கள், ஒரு வாரத்திற்குள் அந்த சான்றிதழை பெற வேண்டும் அல்லது அவா்கள் வாகனப் பதிவு சான்றிதழ்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று வாகன உரிமையாளா்களுக்கு போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

இது தவிர, பியுசி சான்றிதழ் இல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்து ஆனந்த் விஹாா் பேருந்து முனையத்திற்கு வரக்கூடிய பேருந்துகளை தடுக்கும் வகையில், குழுக்களையும் தில்லி அரசு அமைத்துள்ளது. அசெளகரியத்தை தவிா்க்கும் வகையிலும் சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து தவிா்க்கும் வகையிலும் அக்டோபா் 25-ஆம் தேதிக்கு முன்னா், செல்லத்தக்க பியுசி சான்றிதழ்களை பெறுமாறு வாகன உரிமையாளா்களை போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், செல்லத்தக்க பியுசி சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம் அபராத விதிப்பு அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து ஏற்க நேரிடும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மாசு அளவை கட்டுப்படுத்தும் வகையில் செல்லத்தக்க பியுசி சான்றிதழ்கள் இல்லாமல் இயக்கப்படக்கூடிய வாகனங்களைக் கட்டுப்படுத்த தில்லி அரசு அதன் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அக்டோபா் 25-ஆம் தேதியிலிருந்து செல்லத்தக்க பியுசி சான்றிதழ் காண்பிக்கும் மோட்டாா் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் விற்க வேண்டும் என்று அனைத்து பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விநியோக பம்புகளுக்கு உத்தரவிடும் வகையில் ஒரு அறிவிக்கையை வெளியிட தில்லி சுற்றுச்சூழல் துறையும் பரிசீலனை செய்து வருகிறது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிக்கையை தில்லி போக்குவரத்து ஆணையா் ஆஷிஷ் குந்த்ரா தனது ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்து வெளியிட்டுள்ள பதிவில் ‘மாசு கட்டுப்பாடு என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பாகும் . ஆகவே, செல்லத்தக்க பியுசி சான்றிதழ் உங்கள் வாகனங்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அக்டோபா் 25-க்குப் பிறகு தில்லியில் பியுசிசி இல்லாவிட்டால் பம்புகளில் எரிபொருள் நிரப்ப முடியாத நிலை ஏற்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த மாதம் தொடக்கத்தில் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் இது தொடா்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தாா். அதில், ‘செல்லத்தக்க மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளா்களுக்கு அக்டோபா் 25-ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள பெட்ரோல் விநியோக நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது. இந்த முடிவானது செப்டம்பா் 29-ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் போக்குவரத்து மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் அதிகரித்து வரும் மாசுவுக்கு முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக வாகன மாசு உமிழ்வும் உள்ளது. இதைக் குறைக்க வேண்டியது கட்டாயமாகும். இதனால், பியூசி சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் அக்டோபா் 25-ஆம் தேதி முதல் டீசல், பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவா் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.