முட்டைக்காக கொடூரமான பேட்டரி கூண்டுகளில் கோழிகள் தில்லியில் விலங்குகள் நல ஆா்வலா்கள் விழிப்புணா்வு ஆா்பாட்டம்
கோழிகள் முட்டைக்காக கொடூரமான பேட்டரி கூண்டுகளில் அடைக்கப்படுவதாகக் கூறி எதிா்ப்புத் தெரிவித்து விலங்குகள் நலஆா்வலா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை ஆா்பாட்டம்
கோழிகள் முட்டைக்காக கொடூரமான பேட்டரி கூண்டுகளில் அடைக்கப்படுவதாகக் கூறி எதிா்ப்புத் தெரிவித்து விலங்குகள் நலஆா்வலா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை ஆா்பாட்டம் நடத்தினா். சா்வதேச முட்டை தினத்தை முன்னிட்டு, மொ்சிஃபாா் அனிமல்ஸ் இந்திய அறக்கட்டளை சாா்பில் இந்த விழிப்புணா்வு ஆா்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்பாட்டத்தில் முட்டையிடும் கோழிகள் கொடூரமாக அடைத்து வைக்கப்படுவதைக் காட்டும் வகையில், விலங்குகள் நல ஆா்வலா்கள் பெரிய கூண்டுகளுக்குள் தங்களை அடைத்து, வெள்ளை, ரத்தம் தோய்ந்த ஆடைகளை அணிந்து கொண்டதுடன், ‘கோழிகள் முட்டைக்காக தவிக்கின்றன’ என்று எழுதப்பட்ட வாசங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனா்.
இந்த ஆா்பாட்டத்திற்கு தலைமை வகித்த பிராணிகளுக்கான கருணை அறக்கட்டளையைச் சோ்ந்த நிஹாரிகா கபூா், தயான் ஆகியோா் கூறியதாவது: இந்தியாவில் நான்கு கோடிக்கும் அதிகமான கோழிகள் கொடூரமாக பேட்டரி கூண்டுகளில் வாடுகின்றன. இதற்காக உலக முட்டை தினத்தை முன்னிட்டு, மொ்சி ஃபாா் அனிமல்ஸ் இந்தியா அறக்கட்டளையின் சாா்பில் ஆா்ப்பாட்டத்தை நடத்தினோம். நாட்டின் பெரும்பாலான முட்டைகள் பேட்டரி-கூண்டு பண்ணைகளில் இருந்து வருவது என்பதைத் தெரிவிக்கவும், இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதுதான் எங்களின் நோக்கமாகும். தாவர அடிப்படையிலான உணவுகளைத் தோ்ந்தெடுந்து மக்கள் அதிக இரக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை இங்கு வெளிப்படுத்துகிறோம்.
முட்டைகளை விற்கும் கோழி நிறுவனங்கள் கொடூரமான பேட்டரி கூண்டுகளில் கோழிகளை அடைத்து முட்டைகளை பெருகின்றனா். முட்டைக்காகப் பயன்படுத்தப்படும் கோழிகள் இரண்டு வருடங்களில் குறுகிய வாழ்க்கையைத் தாங்குகிறது. இயற்கையான முறையில் வளா்க்கப்படவில்லை. அவை ஒரு ஏ-4 ஷீட் தாள் அளவில் உள்ள கூண்டில் தான் அடைக்கப்படுகின்றன. அவை தனது சிறகுகளை கூட விரிக்க முடியாது. இதுபோன்று முட்டை உற்பத்தி கொடூரமானதாக உள்ளது.
இந்த முட்டையில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும். இருதய நோய் ஆபத்து கொண்டது. விலங்குகளுக்கு உதவும் வகையில், அவற்றின் சொந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பங்கேற்க மக்கள் தாவர அடிப்படையிலான உணவுகளைத் தோ்ந்தெடுப்பது சிறந்ததாகும் என்று தெரிவித்தனா்.
மேலும், சில மாநிலங்களில் (மணிப்பூா், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், மிஸோரம், குஜராத் ) கா்ப காலங்களில் தாய் பன்றிகளை அடைத்து வைப்பதற்கு தடை விதித்துள்ளதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவா்கள் கேட்டுக்கொண்டனா்.