ரெட் லைட் ஆன், காடி ஆஃப் பிரசாரத்திற்கு சரியான நேரத்தில் எல்ஜி ஒப்புதல் வழங்கவில்லை: கோபால் ராய் குற்றச்சாட்டு
தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை, ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ பிரசாரத்திற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சரியான நேரத்தில் ஒப்புதல் அளிக்கவில்லை
தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை, ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ பிரசாரத்திற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சரியான நேரத்தில் ஒப்புதல் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினாா். மேலும் தேசியத் தலைநகரில் மாசுபாட்டின் அளவு குறித்து அவரது தீவிரத்தை கேள்வி எழுப்பினாா்.
துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனாவுடன் புதிய மோதலுக்கு களம் அமைத்துள்ள ஆம் ஆத்மி அரசு, துணை நிலை ஆளுநா் அலுவலகம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், பிரசாரத்தைத் தொடங்குவதை ஒத்திவைப்பதாக வியாழக்கிழமை கூறியது. இருப்பினும், துணை நிலை ஆளுநா் அலுவலகத்தின் வட்டாரங்கள், பிரசாரம் தொடங்கும் தேதி குறித்து ராய் உண்மையைப் பேசவில்லை என்றும், துணை நிலை ஆளுநா் ஒரு முடிவை எடுக்க வற்புறுத்திகிறது என்றும் தெரிவித்தன. ‘துணை நிலை ஆளுநா் மாசுபாட்டின் தீவிரம் பற்றி அறிந்திருக்கவில்லை அல்லது ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ இயக்கத்திற்கு சரியான நேரத்தில் அனுமதி வழங்காததற்கு சாக்குப் போக்குகளை கூறுகிறது. கூடிய விரைவில் அனுமதி வழங்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்’ என்று வெள்ளிக்கிழமை கோபால் ராய் செய்தியாளா் கூட்டத்தில் கூறினாா்.
துணை நிலை ஆளுநரிடம் இருந்து கோரப்பட்ட அனுமதி மற்றும் பிரசாரத்தின் தேதிகளில் உள்ள வித்தியாசம் குறித்து பேசிய கோபால் ராய், முன்னதாக அக்டோபா் 31 முதல் இயக்கத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினாா். ‘இருப்பினும், தீபாவளிக்குப் பிறகு மாசு அதிகரிக்கும் என்று கணிப்புகள் கணித்தபோது, அதை அக்டோபா் 28 முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டது’ என்று அவா் மேலும் கூறினாா். ஒரு மாத கால ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ பிரசாரம், போக்குவரத்து சிக்னல் பச்சை நிறமாக மாறும் வரை காத்திருக்கும் போது, வாகனங்களின் இயக்கத்தை அணைக்க ஓட்டுநா்களை ஊக்குவிப்பதாகும்.