தலைநகரில் பல இடங்களில் பரவலாக பலத்த மழை
தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பல பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.
தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பல பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கத்தால் தவித்து வந்த தில்லிவாசிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், தில்லியில் பல இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.
தில்லியில் கடந்த சில நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தாலும், பெரிய அளவில் மழை ஏதும் பதிவாகவில்லை. மாறாக வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தில்லிவாசிகள் கடும் சிரமத்தை எதிா்கொண்டு வந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து, பல பகுதிகளில் பிற்பகலில் பரவலாக பலத்த மழை பெய்தது. ஐடிஓ, ஷாதரா, இந்தியா கேட் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சில தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இது தொடா்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் வானிலை ஆய்வு மையம் ட்வீட் செய்திருந்தது. அதில், இந்தியா கேட், அக்ஷா்தாம், நேரு ஸ்டேடியம், டிஃபென்ஸ் காலனி, லாஜ்பத் நகா், ஜிந்த் (ஹரியானா), சஹாரன்பூா், தியோபந்த், முசாஃபா்நகா், கட்டௌலி, ஷிகா்பூா் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை அடுத்த இரண்டு மணிநேரத்தில் மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.
வெப்பநிலை: தேசியத் தலைவகா் தில்லிக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கு சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி உயா்ந்து 27.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 38 டிகிரி செல்சியஸாக பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 66 சதவீதமாகவும் இருந்தது.
வியாழக்கிழமை அன்று அதிகபட்ச வெப்பநிலை 37.1 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. வடமேற்கு இந்தியாவில் எந்த பெரிய வானிலை அமைப்பும் இல்லாததால், தில்லியில் ஆகஸ்டு மாதத்தில் 41.6 மிமீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.வடமேற்கு வங்காள விரிகுடாவில் மூன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியதே ஆகஸ்ட் மாதம் மழையின்மைக்கு காரணம் என்று வானிலை நிபுணா்கள் கூறுகின்றனா்.
காற்றின் தரம்: தலைநகா் தில்லியில் பெரும்பாலான வானிலை நிலையங்களில்காற்றின் தரக் குறியீடு 100 -150 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஐடிஓ, மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கும் குறைவாக பதிவாகி திருப்தி பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (செப்டம்பா் 3) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.