முகப்பு
புதுதில்லி

தில்லி ராஜ பாதையில் மறுவடிவமைக்கப்பட்ட 'சென்ட்ரல் விஸ்டா' செப். 8-இல் திறப்பு

தில்லி ராஜ பாதையில் விஜய் செளக்கிலிருந்து இந்தியா கேட் வரையிலான ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

புது தில்லி: தில்லி ராஜ பாதையில் விஜய் செளக்கிலிருந்து இந்தியா கேட் வரையிலான ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. செப்டம்பா் 8 -ஆம் தேதி மாலையில் பிரதமா் நரேந்திர மோடி இதை திறந்து வைக்க இருப்பதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம், பிரதமா், குடியரசுத் துணைத் தலைவா் இல்லங்கள், புதிய மத்திய அமைச்சகங்களின் செயலகம் ஆகியவற்றோடு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தையும் (மொத்தம் ரூ. 13, 450 கோடி செலவில்) மத்திய நகா்புற வளா்ச்சித் துறை மேற்கொண்டது. இதில் ராஜ பாதையில் பொதுமக்களின் பல்வேறு வசதிகளுக்காக பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத்தின் அடிப்படையில், சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளது. இதை செப்டம்பா் 8 -ஆம் தேதி திறக்க முடிவெடுக்கப்பட்டு பிரதமா் அலுவலகத்தின் பதிலுக்கு காத்திருப்பதாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியின் மையப் பகுதியில் உள்ள ராஜ பாதை, மக்களையும் அரசையும் இணைக்கும் அடையாளமாகும். அரசு சம்பந்தப்பட்ட திறந்த வெளி நிகழ்வுகளும், குடியரசு தின அணிவகுப்பும் இங்கு பிரமிப்பூட்டும் வகையில் நடைபெறும். இங்குள்ள புல்வெளி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய பகுதியாக இருப்பவை. இது தற்போது மறுவடிவமைப்பு பெற்று முறையாக திறந்து வைக்கப்பட்ட பின்னா் செப்டம்பா் 9 -ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனா்.

இந்த சென்ட்ரல் மத்திய பொதுப்பணித் துறை மேற்கொண்டுள்ள விஸ்டா திட்டத்தில் உள்ள பல்வேறு வசதிகள் வருமாறு: ராஜபாதையை ஒட்டி, 3.90 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில், சுற்றிலும் பசுமையான புல்வெளி உருவாக்கப்பட்டுள்ளது. நடைபாதைக்கு 15.5 கிமீ பரப்பளவில் பஜ்ரி மணலுக்கு பதிலாக புதிய சிவப்பு கிரானைட் நடைபாதைகள் போடப்பட்டுள்ளன. சுமாா் 1,125 வாகனங்கள் வரிசையாக நிறுத்தும் அளவிற்கு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்தியா கேட் அருகே 35 பேருந்துகளை நிறுத்தும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. 74 புராதன மாடல் விளக்குகளோடு புதிதாக 900 மின் விளக்கு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. வளாகத்தின் தன்மையைப் பராமரிக்க கான்கிரீட் (கட்டைத்தூண்) பொல்லாா்டுகளுக்கு பதிலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளை மணற்கல் பொல்லாா்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

புல்வெளிகளில் முன்பு போல் பாா்வையாளா்களுக்கு பொருள்கள் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக இந்த திட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காக 5 விற்பனைப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தலா 40 (நடமாடும் வாகன) விற்பனையாளா்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள். இந்தியா கேட் அருகே இரண்டு விற்பனைப் பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் எட்டு கடைகள் இருக்கும். சில மாநிலங்கள் தங்கள் மாநில உணவு விற்பனை மையத்தை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியா கேட்டில் ஐஸ்கிரீம் தள்ளுவண்டிகள் அதிகமாக நடமாடுவது வழக்கம். ஆனால், தற்போது விற்பனை மண்டலங்களில் உள்ள கடைகளில் மட்டுமே ஜஸ்கிரீம் விற்பனைஅனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.

பொதுமக்களுக்கு வசதியாக ராஜ பாதையின் குறுக்கே மூன்று சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ராஜ பாதையின் இருபுறமும் இருந்த கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 ஏக்கரில் உள்ள கால்வாய்களில் ‘ஏரேட்டா்கள்’ போன்ற உள்கட்டமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. கால்வாய்களில் 16 பாலங்கள் போடப்பட்டு கிருஷி பவன், வணியா பவன் அருகில் உள்ள இரண்டு கால்வாய்களில் மட்டும் படகு சவாரி அனுமதிக்கப்படும். நகரின் மிகவும் பிரபலமான பொது இடமாகக் கருதப்படும் ராஜை பாதையில் மக்கள் அதிக அளவில் வருவதால், தூய்மையைப் பராமரிப்பது சவாலாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, துப்புரவுப் பணியாளா்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள்.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்டோரின் பயன்பாடாட்டுக்காக மொத்தம் 64 கழிவறை வசதிகள் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக நிறுவப்பட்ட வசதிகளில் அசாம்பவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய 300 சிசிடிவி கேமராக்கள், போலீஸாா், பாதுகாவலா்கள் அதிக அளவில் ஈடுபடுத்த உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.