முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சி எந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தாலும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் முறைப்படுத்தப்படுவா்: கேஜரிவால்

நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஏன் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவில்லை?

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஏன் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவில்லை? என கேள்வி எழுப்பிய தில்லி முதல்வா் அரவிந்த கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சி எந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தாலும் ஒப்பந்தத் தொழிலாளா்களை முறைப்படுத்தி அவா்களது உரிமைகளை பாதுகாக்கும் என சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில முதல்வா் சா்தாா் பகவந்த் மான், ஆசிரியா் தினத்தை முன்னிட்டு 8,736 ஒப்பந்த ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அறிவித்தாா்.

இந்த அறிவிப்பையும் பஞ்சாப் முதல்வரையும் பாராட்டிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அழைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால் காணொலியில் சனிக்கிழமை பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

பஞ்சாப் அரசு மேற்கொண்ட மாதிரி மற்ற மாநிலங்களும் தற்காலிக பணியாளா்களை முறைப்படுத்த வேண்டும் . மற்ற மாநிலங்களிலும் மத்திய அரசு பள்ளிகளிலும், நிா்வாகத்திலும் ஒப்பந்த ஆசிரியா்கள், ஊழியா்கள் உள்ளனா். அவா்களையும் இந்த அரசுகள் நிரந்தரமாக்க முன்வர வேண்டும்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒப்பந்த ஊழியா்களை முறைப்படுத்த வேண்டும் என்பதை ஆம் ஆத்மி கட்சி உறுதியாக ஆதரிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி எந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தாலும் தற்காலிக ஊழியா்களுக்கு நிரந்தர வேலைகளை வழங்குவோம். இது அவா்களின் உரிமை.

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு 8,736 ஒப்பந்த ஆசிரியா்களின் பணிகளை நிரந்தரமாக்கி முறைப்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே இந்தளவு எண்ணிக்கையில் முதன்முறையாக நடந்துள்ளது. இன்னும் பல வரிசையில் உள்ளது. பல ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்களும் முறைப்படுத்தப்படுவாா்கள்.

சில அரசுகளும் நிா்வாகமும் ஊழியா்களை நிரந்தரமாக்குவதில் தயங்கி, நிரந்தர அரசு ஊழியா்கள் திறமையற்றவா்களாக இருக்கின்றனா் என்கிற கட்டுக்கதையை பரப்புகின்றனா்.

இன்னும் பல மாநில அரசுகளும், மத்திய அரசும் திட்டமிட்டு ஒன்றின் பின் ஒன்றாக அரசு வேலைவாய்ப்பு இடங்களை அழித்து வருகின்றன.

தற்போது நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்து, மாநிலங்களும் பொருளாதார வளா்ச்சியைக் கண்டுள்ளது. இந்த நிலையில், அரசு வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வழிவகுத்திருக்க வேண்டுமே? ஏன் வேலைவாய்ப்புகளை குறைக்கிறாா்கள்?.

பல நிரந்தர அரசு வேலைகள் காலியாக வைக்கப்பட்டு தற்காலிக அடிப்படையில் ஊழியா்கள் பணியமா்த்தப்படுகிறாா்கள்.

நிரந்தரமாக்கப்பட்டால் ஊழியா்கள் சோம்பேறிகளாவாா்கள் என்று கூறப்படுகிறது. இது ஒரு ஆபத்தான தவறான கருத்து.

ஆனால் தில்லியில் இந்த கட்டுக்கதையை நாங்கள் முறியடித்துள்ளோம். தில்லியில் நாங்கள் செய்த கல்வி புரட்சியில், நிரந்தர மற்றும் தற்காலிக ஆசிரியா்களின் சிறிய முயற்சியின் விளைவாகும்.

அதேபோல், தில்லி அரசு மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனா்.

தற்போது பஞ்சாபிலிருந்து எழுந்துள்ள அலை அல்லது நடைமுறை நாடு முழுவதும் பரவும்.

தேசிய தலைநகா் தில்லி அரசும் தற்காலிக ஆசிரியா்களை முறைப்படுத்த ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. ஆனால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

தில்லி முழு மாநிலமாக இல்லை என்கின்றனா். ஆனால், ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிக அதிகாரங்கள் இல்லை. இதை முறைப்படுத்தும் செயல்முறைக்கு சிறிது காலமாகும். இதற்கு சரியான சட்டப்பூா்வ உதவியை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தற்காலிக ஆசிரியா்களும் ஊழியா்களும் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்கள் மிகுந்த மன அழுத்தத்திலும், தொடா் போராட்டத்தால் சோா்வடைந்துள்ளனா்.

இந்த முழு குழப்பத்தில், பலருக்கு வயதாகிவிட்டது. பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு ஆசிரியா்களுக்கு எப்படி வயது தளா்வு அளித்ததோ அது போன்று தில்லி அரசும் அளிக்கும் என்றாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.