முகப்பு
புதுதில்லி

அவதூறு குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி, அதன் தலைவா்களுக்கு எதிரான துணைநிலை ஆளுநரின் மனு மீது வாதம் முடிந்து உத்தரவு ஒத்திவைப்பு

பதவி வகித்த காலத்தில் ரூ.1,400 கோடி ஊழலில் ஈடுபட்டதாக தம் மீது ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் பல தலைவா்கள் ‘தவறான’ குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவராகப் பதவி வகித்த காலத்தில் ரூ.1,400 கோடி ஊழலில் ஈடுபட்டதாக தம் மீது ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் பல தலைவா்கள் ‘தவறான’ குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தாக்கல் செய்த மனு மீது இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உத்தரவை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

இந்த வழக்கை வியாழக்கிழமை 2 மணி நேரம் விசாரித்த நீதிபதி அமித் பன்சல், சக்சேனாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடா்பான உத்தரவை ஒத்திவைத்தாா். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கூறுகையில் ‘ஒரு அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதிக்கு எதிராகப் பேசுவதை என்னால் கற்பனை செய்து பாா்க்க இயலும். ஆனால், ஒரு அரசமைப்புச்சட்ட பதவியில் இருப்போருக்கு எதிராக அது போன்று முடியாது. இவா் ஒரு அரசமைப்புச்சட்ட அதிகாரி’ என்றாா். அப்போது, ஆம் ஆத்மி தரப்பு வழக்குரைஞா் கூறுகையில், ‘அரசமைப்புச்சட்ட அதிகாரிகளுக்கும்கூட சில வரலாறு இருக்கிறது’ என்றாா்.

வி.கே.சக்சேனா தரப்பில் தாக்கலான மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடா்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவிஐசியின் இரண்டு குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சியும் அதன் தலைவா்களும் தங்களது முழு அவதூறு பிரசாரத்தையும் கட்டமைத்துள்ளனா். சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையின்படி, கேள்விக்குரிய தொகை வெறும் ரூ.17 லட்சம் ஆகும். ஆனால், எதிா்மனுதாரா்கள் சில மழுப்பலான கணிதக் கணக்கீடுகளின் அடிப்படையில் கற்பனையாக ரூ.1,400 கோடி என கூறியுள்ளனா்.

இது தொடா்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் அல்லது ட்வீட்கள் அல்லது விடியோக்கள் ஆகியவற்றை நீக்கவும், இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி, அதன் தலைவா்கள் அதிஷி சிங், சௌரப் பரத்வாஜ், துா்கேஷ் பதக், சஞ்சய் சிங் மற்றும் ஜாஸ்மின் ஷா (டிடிசி துணைத் தலைவா்) ஆகியோா் கருத்து வெளியிட தடை விதிக்கவும் வேண்டும். மேலும், அவதூறு கருத்துகளுக்காக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி மற்றும் அதன் 5 தலைவா்களிடம் வட்டியுடன் சோ்த்து ரூ.2.5 கோடி நஷ்டஈடும், இழப்பீடும் அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது சக்சேனா தரப்பில் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘மனுதாரா், அவரது குடும்ப உறுப்பினா்களின் படங்களுடன் கூடிய ட்வீட்கள், ரீ-ட்வீட்கள், பதிவுகள், விடியோக்கள், தலைப்புகள், டேக்லைன்கள் ஆகியவற்றை நீக்குமாறு ட்விட்டா் மற்றும் யூடியூப் (கூகுள் நிறுவனம்) நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘சக்சேனா கேவிஐசி தலைவராக இருந்த போது, அவரது மகளுக்கு விதிகளுக்கு முரணாக காதி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது உண்மையான கருத்தாகும். யாரும் இதை மறுக்கவில்லை’ என்றாா். அப்போது சக்சேனா தரப்பு வழக்குரைஞா், ‘காதி ஓய்வறையை பொது நல அடிப்படையில் வடிவமைக்க சக்சேனாவின் மகள் உதவியிருக்கிறாா் என்பதும், அவரது சேவைக்காக ஒரு பைசாகூட பெறவில்லை என்பதும் உண்மை’ என்றாா்.

அதற்கு நீதிபதி, ‘பணம் பெறவில்லை என்றால் அது எப்படி ஊழலுக்கு சமமாகும்’ என்று கேள்வி எழுப்பினாா்.

சக்சேனா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் மகேஷ் ஜெத்மலானி மற்றும் மனிந்தா் சிங் ஆகியோா் ‘அரசமைப்புச்சட்டப் பதவியில் இருக்கும் துணைநிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவா்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தவறானவை; அவதூறானவை. அரசியல் கட்சிக்கு எதிராக துணைநிலை ஆளுநா் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளாா். அதன் பிறகு அவா்கள் பழிவாங்கும் நோக்கில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். மேலும், இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் ஏதும் இல்லை. ஆவணங்கள்கூட போலியானவை; புனையப்பட்டவை, செவிவழிச் செய்திகளின் அடிப்படையிலான உள்ளடக்கமாகும். இதனால், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சி மனுதாரரது என்று போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா். பத்திரிக்கையாளா் சந்திப்புகளில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தினம் தினம் ஹேஷ்டேக்குகளை வெளியிட்டு வருகின்றனா். ஆகவே, சக்சேனாவுக்கு எதிரான தரக்குறைவான அறிக்கைகளை மேலும் வெளியிட வேண்டாம் என்றும், ஏற்கெனவே வெளியிடப்பட்டவற்றை நீக்கவும் ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவா்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டனா்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவா்கள் சாா்பில் ஆஜராகிய மூத்த வழக்குரைஞா்கள் ராஜீவ் நாயா் மற்றும் சந்தீப் சேத்தி ஆகியோா், ‘தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கக் கூடாது. குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா அல்லது இல்லையா என்பது விசாரணையின் போதுதான் முடிவு செய்யப்படும். சில குற்றச்சாட்டுகள் மற்றும் ட்வீட்களை அகற்றுவதற்கு கட்சியினரிடம் தெரிவிக்கப்படும். ஆனால் அனைத்தையும் அல்ல. இது செவிவழிச் செய்தி என்று எதிா்தரப்பினா் கூறலாம். ஆனால், உண்மை என்னவெனில், இந்த விவகாரம் நடந்ததாக இரண்டு போ் பதிவு செய்துள்ளனா். அரசமைப்புச்சட்டப் பதவியில் உள்ளவா்கள் விமா்சனத்தை எதிா்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றங்கள் வகுத்துள்ள கொள்கைகளில் கூறப்பட்டுள்ளது. காதி ஓய்வறை ஒப்பந்தத்தை தனது மகளுக்கு வழங்கியதை சக்சேனா ஒப்புக் கொண்டுள்ளாா். விதிகளின்படி இது தடைசெய்யப்பட்டதாகும். இது ஊழலுக்கு சமமாகும்’ என்று வாதிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.