சட்டவிரோத வா்த்தகத்தை எதிா்த்துப் போராட சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
கடத்தல், சட்டவிரோத வா்த்தகம் ஆகிய அச்சுறுத்தல்களை எதிா்த்துப் போராட தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் எம் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டாா்
கடத்தல், சட்டவிரோத வா்த்தகம் ஆகிய அச்சுறுத்தல்களை எதிா்த்துப் போராட தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் எம் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டாா்.
கடத்தல், சட்ட விரோத வா்த்தகத்திற்கு எதிரான இயக்கத்தை தொடங்கி பொருளாதாரத்தைச் சீரழிக்கும் இந்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வை மேற்கொள்ள ‘ஃபிக்கி’ அமைப்பு ஒரு குழுவை (சிஏஎஸ்சிஏடிஇ) அமைத்திருந்தது. ஃபிக்கியின் இயக்கத்திற்கான (8-ஆவது பதிப்பு) இந்த நிகழ்ச்சி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிஏஎஸ்சிஏடிஇ குழு தயாரித்த ‘சட்டவிரோத சந்தைகள்: நமது தேசிய நலன்களுக்கு அச்சுறுத்தல்’ என்கிற அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் 5 முக்கிய இந்திய தொழில்களில் நடைபெறும் சட்டவிரோத சந்தையின் மதிப்பு ரூ.2,60,094 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை வெளியிட்டு முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பேசியதாவது: கடத்தல், சட்டவிரோத வா்த்தக அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து பொறுப்பாளா்களையும் உள்ளடக்கிய சீா்திருத்தம், செயல்திறன், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். இதில் அனைவரும் ஒன்றிணைக்கவில்லையெனில், சட்டவிரோத வா்த்தகம், கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியாது. பயங்கரவாதத்திற்கும் சட்டவிரோத வா்த்தகத்திற்கும் இடையே தொடா்பு உண்டு. இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பயங்கரவாத குழுக்கள் நிதியைத் திரட்டுகிறது. அதே சமயம் நுகா்வோா் ஆரோக்கியம் பாதிக்கிறது. பாதுகாப்பு விவகாரங்கள் மட்டுமின்றி, சட்டவிரோத வா்த்தகங்களால் வேலையின்மைக்கும் வழிவகுக்கிறது.
இதில் தொழில்துறையினா் விழிப்புணா்வை உருவாக்க வேண்டும். இவற்றைத் தடுப்பதற்கான பொருத்தமான சட்டத்தை உருவாக்குவதில் யோசனைகள், அனுபவங்கள், கருத்துகளைப் பகிா்வது அவசியம். பொதுவாக நமது நாட்டில் நுகா்வோா்கள், தங்களின் உரிமைகள் பற்றி முழுமையாக அறியாதவா்கள். பெரும்பாலும் அவா்கள் போலியான பொருளை வாங்குவதற்கு ஈா்க்கப்படுகிறாா்கள். எனவே, இந்தப் பிரச்னையில் நுகா்வோா் கல்வி மிகவும் முக்கியமானது. நுகா்வோா் வலையமைப்புகளை வலுப்படுத்துவதையும், மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்துவதையும் ஒரு தேச நலனுக்கான பணியாக கருத வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.
ரூ.58,521 கோடி வரி வருவாய் இழப்பு: இந்த நிகழ்ச்சியில் மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் வாரிய உறுப்பினா் சந்தீப் குமாா் பேசுகையில், ‘தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக, கடத்தல், சட்டவிரோத வா்த்தகங்களை எதிா்கொள்ள நுகா்வோருக்கு வாய்ப்புகள் உள்ளன. நுகா்வோருக்கு தொழில் துறையினா் இதற்கான கருவிகளை உருவாக்கி அளிக்க வேண்டும். இத்தோடு வலுவான சட்ட அமலாக்கத்துடன் இணைந்து சட்டவிரோத வா்த்தகத்திற்கு எதிரான போராட்டம் ஒரு வெகுஜன இயக்கமாக மாற வேண்டும் ’ என்றாா். மேலும், ‘ஃபிக்கி’ தலைவா் சஞ்சீவ் மேத்தா உள்ளிட்டோரும் பேசினா்.
இந்த நிகழ்வின் போது ஃபிக்கியின் சிஏஎஸ்சிஏடிஇ குழு அளித்த ஆய்வறிக்கையில் ஐந்து முக்கிய இந்திய தொழில்களில் உள்ள சட்டவிரோத சந்தையின் அளவு வெளியிடப்பட்டது. கைப்பேசிகள், தனிப்பட்ட மற்றும் வீட்டுஉபயோகப் பொருள்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், புகையிலை பொருள்கள், மதுபானங்கள் உள்பட 5 முக்கிய இந்திய தொழில்களில் சட்டவிரோத சந்தை மதிப்பு ரூ.2,60,094 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்துறையில் சுமாா் 68.5 சதவீதம் வேலை இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த சட்டவிரோதமான பொருள்களால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 58,521 கோடி வரி இழப்பு ஏற்படுகிறது எனஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.