தெருநாய்களின் இனவிருத்தியை கட்டுப்படுத்தும் திட்டம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
பொது வெளியில் தொல்லை கொடுக்கும் நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விலங்கு இனவிருத்தி கட்டுப்பாட்டுத் திட்டப் பணிகளை நகராட்சிகள்
பொது வெளியில் தொல்லை கொடுக்கும் நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விலங்கு இனவிருத்தி கட்டுப்பாட்டுத் திட்டப் பணிகளை நகராட்சிகள், மாநகராட்சிகள், பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இதற்கான விதிகளை மத்திய அரசு வரையறுத்து கடந்தாண்டு ஜுலை 31 வரைவு அறிக்கையை வெளியிட்டது. பின்னா், இறுதி செய்யப்பட்ட 2023-ஆம் ஆண்டு விலங்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு விதிகளுக்கான அறிவிக்கை கடந்த மாா்ச் 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கையை மாநிலங்களின் தலைமைச் செயலாளா்கள், முதன்மைச் செயலாளா்கள், கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறைகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுப்பியுள்ளது.
இது குறித்த செயலாக்கம் தொடா்பாக மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகம் சாா்பில் கூறப்பட்டுள்ளது வருமாறு: 1960 -ஆம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், பல்வேறு நீதிமன்றத்தின் உத்தரவுகள் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், விலங்கின ஆா்வலா்கள் கோரிக்கைகள் அடிப்படையில் 2023- ஆம் ஆண்டு விலங்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு விதிகள், கடந்த மாா்ச் 10-ஆம் தேதியிட்ட அறிவிக்கையின் வாயிலாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி 2001-ஆம் ஆண்டு விலங்கு இனவிருத்தி கட்டுப்பாட்டு (நாய்கள்) விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் பொது வெளியில் உள்ள (தெரு) நாய்களை வேறு இடங்களில் கொண்டு விடுவதை பல்வேறு தீா்ப்புகளில் உச்சநீதிமன்றம் அனுமதிக்க மறுத்துள்ளது.
தற்போதைய புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகள், மாநகராட்சிகள், பஞ்சாயத்துகள் உள்ளிட்டவை, பொது இடங்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி போடுவதற்கான இனவிருத்தி கட்டுப்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தவிர ரேபிஸ் நோய்த் தடுப்புத் திட்டங்களையும் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்த வேண்டும். இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது, விலங்குகளை வதை செய்யும் பிரச்னையும் தீா்க்கப்பட வேண்டும். தெரு நாய்களை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லாமல், மனிதா்களுக்கும், நாய்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையை எவ்வாறு தீா்ப்பது என்பதற்கும் இந்த விதிகளில் வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த விதிகளை முறையாக அமல்படுத்தி, விலங்கு இனவிருத்தி கட்டுப்பாட்டுத் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தலாம். இதன் மூலம் விலங்குகள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டு, தெரு நாய்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். விலங்கு இனவிருத்தி கட்டுப்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ளும் போது, இந்திய விலங்குகள் நல வாரியத்தால் பிரத்தியேகமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இது போன்ற நிறுவனங்களின் பட்டியல் வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.