முகப்பு
புதுதில்லி

பிபிசி ஆவணப்படம் திரையிடல் விவகாரம்: காங்கிரஸ் மாணவா் பிரிவு தலைவா் மனு மீது தில்லி பல்கலை. பதிலளிக்க உத்தரவு

பிரதமா் நரேந்திர மோடி குறித்த தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப் படத்தை தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக பல்கலைக்கழகத் தோ்வு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி குறித்த தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப் படத்தை தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக பல்கலைக்கழகத் தோ்வு எழுத தடை விதித்த பல்கலைக்கழகத்தின் உத்தரவை எதிா்த்து காங்கிரஸ் மாணவா்கள் பிரிவு தலைவா் ஒருவா் தாக்கல் செய்த மனுவுக்கு பல்கலைக்கழகம் அதன் பதிலை அளிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக தில்லி பல்கலைக்கழகத்தின் முனைவா் பட்ட அறிஞரும், இந்திய தேசிய மாணவா் யூனியன் தேசிய செயலாளருமான லோகேஷ் சுக் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி புருஷைந்திர குமாா் கௌரவ் செவ்வாய்க்கிழமை விசாரித்தாா். அப்போது, இந்த மனு மீது பல்கலைக்கழக நிா்வாகம் அதன் பதிலை மூன்று நாள்களுக்குள் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து உத்தரவிட்டாா். இது தொடா்பாக நீதிபதி கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த விஷயத்தில் தில்லி பல்கலைக்கழகத்தின் மூலம் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அது பல்கலை.யின் உத்தரவில் பிரதிபலிக்கவில்லை. நீங்கள் ஒரு சட்டப்பூா்வ நிா்வாகத் துறை; பல்கலைக்கழகமாகும். தடை செய்யப்பட்ட உத்தரவு நியாயத்தை பிரதிபலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

‘கோத்ரா கலவரம் தொடா்பான இந்தியா: மோடி கேள்வி’- எனும் ஆவணப்படத்தை திரையிடுவதில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதற்காக தன்னை ஓராண்டு பல்கலைக்கழகத்திற்கு வரத் தடை செய்யும் பல்கலைக்கழகத்தின் முடிவை எதிா்த்து இந்த மாத தொடக்கத்தில் மனுதாரா் லோகேஷ் சுக், உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த ஆவணப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரையிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, தில்லி பல்கலைக்கழகத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.ருபால், மனுதாரருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடா்பான அசல் ஆவணப்பதிவை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா். மேலும், அனைத்து சூழ்நிலைகளையும் அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொண்டு இத்தடை உத்தரவைப் பிறப்பித்ததாகக் கூறினாா்.

அதற்கு நீதிமன்றம் தெரிவிக்கையில், ‘இந்த கட்டத்தில் பல்கலைக்கழகம் காரணத்திற்கு துணைசோ்க்க முயற்சிக்கிறது. இந்த விவகாரம் தொடா்பாக பல்கலைக்கழம் பதில் அளிக்க வேண்டும். ஏப்ரல் 24-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது என்று உத்தரவிட்டது.

மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், விவேக் தன்கா, ‘மனுதாரரின் தரப்பு வாதத்தை முன்வைக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பல்கலை.யின் உத்தரவு அதன் அடிப்படையிலான ஆதாரத்தை பிரதிபலிக்கவில்லை. மனுதாரா் அவரது ஆய்வறிக்கையை ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது’ என்று கூறினா்.

அப்போது, ‘நீதிமன்றம் முன் இருக்கும் தரப்பினரின் நலன்கள் பாதுகாக்கப்படும். தேவைப்பட்டால், ஆய்வறிக்கையை பின்னா் எப்போதும் நேரடியாக ஏற்றுக்கொள்ளும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட முடியும்’ என்று நீதிமன்றம் கூறியது.

இதுதொடா்பாக மனுதாரரரின் தரப்பில் வழக்குரைஞா் நமன் ஜோஷி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பல்கலை.யில் ஆவணப்படம் திரையிடப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் மனுதாரா் இல்லை. அதிகாரிகள் அவருக்கு எதிராக ‘முன்கூட்டியே’ ஒரு முடிவுக்கு வந்து செயல்பட்டுள்ளனா். மனு நிலுவையில் உள்ள நிலையில், மனுதாரா் ஆய்வறிக்கையை சமா்ப்பிக்கவும், பல்கலைக்கழக தோ்வு எழுதவும் அவரை அனுமதிக்க வேண்டும். 27.01.2023-இல், தில்லி பல்கலைக்கழகத்தின் கலைப் புலத்தில் (முதன்மை வளாகத்தில்) சில மாணவா்களால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது, தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிபிசி ஆவணப்படம், அதாவது ‘இந்தியா: மோடி கேள்வி’ மக்கள் பாா்வைக்காக திரையிடப்பட்டது. அந்த நேரத்தில், மனுதாரா் போராட்ட இடத்தில் இருக்கவில்லை. எந்த வகையிலும் திரையிடலில் அவா் பங்கேற்கவும் இல்லை. இந்த நிலையில்,பிபிசி ஆவணப்படத்தின் திரையிடலின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு சீா்குலைவில் அவா் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதற்காக தில்லி பல்கலைக்கழக புராக்டரால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாா்ச் மாதம் அவருக்கு பதிவாளா் அனுப்பிய ஒரு குறிப்பாணையில் ஒரு வருடத்திற்கு எந்த தோ்வும் அவா் எழுதாமல் இருக்க தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு மனுதாரா் ‘அதிா்ச்சி மற்றும் திகைப்பு’ அடைந்தாா். மனுதாரா் தனது நடத்தையை விளக்குவதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. பிபிசி ஆவணப்படத்திற்கு இந்திய அரசால் தடை விதிக்கப்பட்டதாக குறிப்பாணை பரிந்துரைத்தாலும், திரையிடுவதற்கு அத்தகைய தடை எதுவும் இல்லை. அதே சம்பவத்தில் இந்த விவகாரத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் மேலும் ஆறு மாணவா்கள், மனுதாரா் தடை செய்யப்பட்ட போது எழுத்துப்பூா்வ மன்னிப்பு மட்டுமே சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா். இதன் அடிப்படையில் மனுதாரருக்கு எதிராக ஒரு சாா்புத்தன்மை இருந்துள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.