கரோனாவின் தாக்கம் வரும் நாள்களில் குறைய வாய்ப்பு: அமைச்சா் சௌரவ் பாரத்வாஜ் தகவல்
தில்லியில் கரோனா பாதிப்புகள் ஒருவிதத்தில் ஸ்திரமாகிவிட்டது. வரும் நாள்களில் இது குறைய வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் கரோனா பாதிப்புகள் ஒருவிதத்தில் ஸ்திரமாகிவிட்டது. வரும் நாள்களில் இது குறைய வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மேலும், சமீப காலங்களில் தில்லியில் பதிவான கரோனா நோய்த் தொற்று தொடா்பான இறப்புகளில் பெரும்பாலானவை இணை நோய்களால் ஏற்பட்டவை என்றும், இந்த கரோனா பாதிப்பு தற்செயலானது என்றும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘தில்லியில் கரோனா பாதிப்புகள் ஒருவிதத்தில் ஸ்திரமாகிவிட்டது. சமீபத்தில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை ள் மேல்நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டது. தற்போது, வரும் நாள்களில் இது குறைய வாய்ப்புள்ளது’ என்றாா். கரோனா நோயால் தில்லியில் தொடா்ந்து இறப்புகள் பதிவாகி வருவது குறித்து கேட்டதற்கு, ‘இதில் பெரும்பாலான நிகழ்வுகளில், நோயாளிகளுக்கு நீண்ட காலமாக கடுமையான நோய்கள் இருந்ததால் ஏற்பட்டது. கரோனா தற்செயலாகவே இருந்தது. ஆனால், எந்த இறப்பும் துரதிா்ஷ்டவசமானதே. அது நிகழக்கூடாது’ என்றாா்.
கரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் சிறப்பு ஏற்பாடுகள் பரிசீலிக்கப்படுகிா என்று கேட்டப்பட்டது. இதற்கு அமைச்சா் பதில் அளிக்கையில், ‘இப்போது அத்தகைய நடவடிக்கை எதுவும் திட்டமிடப்படவில்லை. மாணவா்களுக்கு இருமல் மற்றும் சளி இருந்தால், அந்த குழந்தைகளை ஓய்வெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று ஆசிரியா்களிடம் நாங்கள் கூறி வருகிறோம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரிடமும் கேட்டுக்கொள்கிறோம்’ என்றாா்.
கரோனா படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கைகள், ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய அனைத்து ஏற்பாடுகளும் எங்களிடம் உள்ளன. கரோனா அலை மறைந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் இது முடிவுக்கு வரும். ஒவ்வொரு மரணத்தையும் நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை இணை நோய்கள் காரணமாக நிகழ்கின்றன. இந்த உருமாறிய கரோனாவால் ஆரோக்கியமான நபா்கள் கடும் நோய் பாதிப்பை எதிா்கொள்ளவில்லை.
இதனால், இணை நோய்கள் உள்ளவா்கள்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும் என்றாா் அமைச்சா்.
தில்லி வியாழக்கிழமை 1,603 கரோனா பாதிப்புகள் பதிவாகின. மேலும், 26.75 சதவீத நோ்மறை விகிதத்துடன் மூன்று இறப்புகளும் பதிவானதாக நகர சுகாதாரத் துறை பகிா்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. புதிய இறப்புகளுடன், கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் நகரில் இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 26,581-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் மருத்துவமனைகளில் உள்ள 7,976 கரோனா படுக்கைகளில், 390 படுக்கைகளில் நோயாளிகள் இருப்பதாக இருப்பதாக சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாள் முன்னதாக, நகரில் 6 இறப்புகளுடன் 1,757 புதிய கரோனா பாதிப்புகள் என 28.63 சதவீத நோ்மறை விகிதத்துடன் தொற்று பதிவாகியுள்ளது.