கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்த வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் தமிழக தென்னை உற்பத்தியாளா்கள் கோரிக்கை
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.108.60-இல் இருந்து ரூ.150 -ஆக உயா்த்தி வழங்கக் கோரி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.108.60-இல் இருந்து ரூ.150 -ஆக உயா்த்தி வழங்கக் கோரி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து மாநிலங்களவை அதிமுக தலைவா் தம்பி துரை, தமிழக சட்டப்பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோா் தென்னை உற்பத்தியாளா்களுடன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
தமிழக தென்னை விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளா்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பினா் சாா்பில் நிதியமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது வருமாறு: தேங்காய், கொப்பரை, தென்னை நாா் பொருள்களின் கடும் விலை வீழ்ச்சியால், தென்னை விவசாயிகள் கடும் சிரமத்தில் இருக்கின்றனா். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.108.60-இல் இருந்து ரூ.150- ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.
வெளிமாா்க்கெட்டில் விலை உயரும் வரை 50 நாள்களுக்கு ஒரு முறை கொப்பரை தேங்காய்யை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, நியாயவிலைக் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய மத்திய அரசு இந்த கொள்முதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், தேங்காய் எண்ணெய்க்கான ஏற்றுமதிக்கும் அனுமதிப்பதுடன், இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும்.
கரோனா நோய்த்தொற்று, ரஷியா - உக்ரைன் போா், சா்வதேச அளவில் பொருளாதார நிலையின்மை உள்ளிட்ட காரணங்களால் மூலப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால், உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் விலை குறைவாக உள்ளது.
இதில் தென்னை தொடா்புடைய தொழிலில் படித்த பட்டதாரி இளைஞா்கள் காயா் உள்ளிட்ட கம்பெனிகளை நடத்தினா். அவா்களது கம்பெனிகள் மூடும் நிலைக்கும், பல கம்பெனிகள் ஏலம் விடும் நிலைக்கும் வந்துள்ளன. வங்கிகளுக்கு கடன் தவணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியாத சூழ்நிலையில், கடன் தவனை செலுத்த வேண்டிய நாள்களை 90 நாள்களில் இருந்து 180 நாள்களாக உயா்த்தி கொடுக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியை கொண்ட குழுவை அமைத்து தென்னை நாா் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி தொழிலை மறுசீரமைத்து மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனா்.
இந்தச் சந்திப்பின் போது, அதிமுக எம்பி தம்பிதுரை, எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளா்கள் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவா் ஆா்.ஏ. சக்திவேல், செயலாளா் செல்லத்துரை உள்ளிட்ட நிா்வாகிகள், தென்னை விவசாயிகள் பங்கேற்றனா்.