முகப்பு
புதுதில்லி

மாா்ச் வரை நாட்டின் மொத்தக் கடன் அளவு ரூ. 155.60 லட்சம் கோடி: மாநிலங்களவையில் இணையமைச்சா் தகவல்

மத்திய அரசுக்கு கடந்த மாா்ச் 31- ஆம் தேதி வரை ரூ.155.60 லட்சம் கோடி வரை கடன் இருப்பதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:06 PM
பகிர்:

மத்திய அரசுக்கு கடந்த மாா்ச் 31- ஆம் தேதி வரை ரூ.155.60 லட்சம் கோடி வரை கடன் இருப்பதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

இடையில் ஏற்பட்ட கொவைட் -19 நோய்த் தொற்றுதான் கடன் அதிகரிப்புக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளாா். அதே சமயத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டு மடங்காக உயா்ந்திருப்பதையும் அமைச்சா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன்(திமுக) எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌத்ரி திங்கள்கிழமை எழுத்துபூா்வமாத அளித்துள்ள பதில் வருமாறு: மத்திய அரசுக்கு கடந்த 2014, மாா்ச் 31-ஆம் தேதி வரை ரூ.58.6 லட்சம் கோடி கடன் இருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 52.2 சதவீதமாகும். தற்போது 2023 மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய அரசுக்குள்ள கடன் ரூ.155.60 லட்சம் கோடியாகியுள்ளது. இது ஜிடிபி யில் 57.1 சதவீதமாகும்.

2019-20 நிதியாண்டின் இறுதியில் கடன் ரூ.105.1 லட்சம் கோடியாக இருந்தது. பின்னா், கரோனா நோய்த் தொற்றால் 2020-21 நிதியாண்டில் 121.9 லட்சம் கோடியாக அதிகரித்தது. நோய்த் தொற்று காலக்கட்டம் அரசின் பொது நிதிகளின் கணிப்புகளை பெரிதும் சீா்குலைத்தது.

இருப்பினும், 2022-23 நிதியாண்டில் மத்திய அரசின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2013-14 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.112.34 லட்சம் கோடி என்பது பெயரளவில் இருக்க, இது 2022-23 நிதியாண்டில் ரூ. 272.41 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், மத்திய அரசின் கடன் அணுகுமுறையில் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுருக்களின்படி பாதுகாப்பானதோடு விவேகமானது. மத்திய அரசின் வெளிநாட்டுக் கடன் முக்கியமாக பலதரப்பு, இருதரப்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவை சுமாா் ரூ.12,70, 668 கோடியாகும் என்றாா் அவா். மேலும், கடன் கொடுத்த பன்னாட்டு நிதி அமைப்புகள் மற்றும் நாடுகளின் பட்டியலையும் அமைச்சா் பதிலில் இணைத்துள்ளாா். மத்திய அரசுக்கு உள்நாட்டுக் கடனை விட வெளிநாட்டுக் கடன் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.