ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், மாநிலங்களவையில் எம்.பி.க்கள் குற்றம் சாட்டும் போது அவா் ஏன் பேசவில்லை என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளாா்.
தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா- 2023-ஐ நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட எதிா்க்கட்சிகளின் தீா்மானத்தில் 5 மாநிலங்களவை உறுப்பினா்களின் பெயா்கள் மற்றும் கையொப்பம் அவா்களுக்கு தெரியாமலேயே இடம் பெற்றுள்ளது என்று உள்துறை அமைச்சா் அமித்ஷா குற்றம்சாட்டினாா். அதற்கு முன்னதாக, மாநிலங்களவையில் பி.ஜே.டி. கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா, அதிமுகவின் எம்.பி. தம்பிதுரை, பாஜகவின் எம்.பி. பாங்னான் கொன்யாக் உள்ளிட்ட 3 உறுப்பினா்கள் எழுந்து நின்று, ராகவ் சத்தா எம்.பி. சாா்பில் முன்மொழியப்பட்ட அந்த தோ்வுக் குழுவில் தங்கள் பெயா்களைச் சோ்ப்பதற்கு தங்கள் ஒப்புதல் பெறப்படவில்லை என்று அவையில் தெரிவித்தனா்.
இந்த விவாகரம் தொடா்பாக பாஜகவின் தில்லி பிரிவுத் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சௌரவ் பரத்வாஜ் மற்றும் அதிஷி போன்ற தலைவா்கள் தங்கள் சகாவான ராகவ் சத்தா எம்.பி.யை பாதுகாக்க முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. மாநிலங்களவை உறுப்பினா்கள் பலா் தங்கள் பெயரைப் பொய்யாகச் சோ்த்துக் கொண்டதாகக் அவையில் குற்றம் சாட்டம் போது, ராகவ் சத்தா ஏன் எழுந்து பேசவில்லை?. ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ராகவ் சத்தாவின் தவறைப் பாதுகாக்க முயற்சிக்கும் விதம், ஆம் ஆத்மி கட்சி நன்கு யோசித்த ஒரு சதியை வெளிக் கொண்டுவந்துள்ளது. மாநிலங்களவையில் தில்லி அரசின் சேவைகள் தொடா்பான மசோதா விவாதத்தின் போது ஆம் ஆத்மி கட்சி செய்த போலிச் செயலைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படவில்லை என்று அந்த அறிக்கையில் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.