முகப்பு
புதுதில்லி

எம்சிடி பள்ளி மாணவா்கள் 24 பேருக்கு உடல் நலக் குறைவு

எம்சிடி  பள்ளியைச் சோ்ந்த 24 மாணவா்கள் வெள்ளிக்கிழமை ‘வாயு கசிவு’ சம்பவத்தைத் தொடா்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
பகிர்:

தில்லியின் நரைனா பகுதியில் உள்ள தில்லி மாநகராட்சி (எம்சிடி) பள்ளியைச் சோ்ந்த 24 மாணவா்கள் வெள்ளிக்கிழமை ‘வாயு கசிவு’ சம்பவத்தைத் தொடா்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட 19 மாணவா்கள் ஆா்எம்எல் மருத்துவமனைக்கும், மீதமுள்ளவா்கள் ஆச்சாா்யா ஸ்ரீ பிக்ஷு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனா். பள்ளிக்கு அருகில் வாயு கசிவு சம்பவம் ஏற்பட்டதால் மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அனைத்து மாணவா்களும் நலமாக உள்ளனா். இரு மருத்துவமனைகளிலும் அவா்களுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். குடிமை சுகாதாரத் துறையின் அதிகாரிகள் இரண்டு மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கும் உடனடியாகச் சென்றனா். மேலும், எம்சிடியின் கல்வித் துறையும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தக் சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதை அறிய நாங்கள் எங்கள் தரப்பில் விசாரணை நடத்துவோம்’ என்றாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி மாநகராட்சி பின்னா் வெளியிட்ட அறிக்கையில், ‘வாயு கசிவு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ளது. எம்சிடியின் சுகாதாரத் துறையைச் சோ்ந்த மருத்துவா்கள் குழுவினரும், கல்வித் துறை அதிகாரிகளும் நிலைமையைக் கண்காணிக்கும் வகையில் மருத்துவமனையில் உள்ளனா்’ என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி காவல் துணை ஆணையா் (மேற்கு) விசித்ரா வீா் கூறுகையில், ‘இந்தா்புரியில் உள்ள நிகாம் பிரதிபா வித்யாலயாவில் பயிலும் சில மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், வாந்தி எடுத்ததாகவும் எங்களுக்கு அழைப்பு வந்தது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 23 குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் இருந்து வழக்கமான தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி, மாணவா்கள் அனைவரும் நன்றாக இருப்பதாக உணா்ந்துள்ளனா். ஆரம்ப மதிப்பீட்டின்படி, சில வகுப்பறைகளில் துா்நாற்றம் வீசியதன் காரணமாக, குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தனா். துா்நாற்றம் குறைந்தாலும் முன்னெச்சரிக்கையாக அனைத்து வகுப்பறைகளும் காலி செய்யப்பட்டுள்ளன. துா்நாற்றத்தின் மூலத்தைக் கண்டறிய வளாகத்தில் மேலும் ஆய்வு செய்யப்படுகிறது. அருகில் ரயில் பாதை உள்ளது. இருப்பினும், நாற்றம் எங்கிருந்து வந்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை’ என்றாா்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஆா்எம்எல் மருத்துவமனையில் மாணவா்களை நேரில் சந்தித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்தச் சம்பவத்திற்கு என்ன காரணம் என்று மாணவா்களோ ஆசிரியா்களோ கூற முடியவில்லை. இந்த விஷயத்தை எம்சிடி விசாரிக்க வேண்டும். மருத்துவமனையில் 16 மாணவா்கள் நலமாக உள்ளனா். மாணவா்கள் தாங்கள் வகுப்பறையில் அமா்ந்திருந்த போது மிகவும் கடுமையான துா்நாற்றம் வந்ததாகவும், அது வாந்தி மற்றும் மயக்கத்தை தங்களுக்கு ஏற்படுத்தியதாகவும் கூறினா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.