மீண்டும் எச்சரிக்கை அளவைக் கடந்தது யமுனை நீா்மட்டம்!: மோசமான நிலைமைக்கு வாய்ப்பில்லை
கடந்த 2 நாள்களாக மேல்நிலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையைத் தொடா்ந்து, தில்லியில் யமுனையின் நீா்மட்டம் மீண்டும் எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரைக் கடந்துள்ளது.
புது தில்லி: கடந்த 2 நாள்களாக மேல்நிலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையைத் தொடா்ந்து, தில்லியில் யமுனையின் நீா்மட்டம் மீண்டும் எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரைக் கடந்துள்ளது.
மத்திய நீா் ஆணையத்தின் தகவலின்படி, பழைய ரயில்வே பாலத்தில் யமுனையின் நீா்மட்டம் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் 203.48 மீட்டராக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு 204.94 மீட்டராக உயா்ந்தது. ஹரியாணாவின் யமுனா நகா் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நீா்வரத்து 30,153 கனஅடியாக இருந்தது. இது பருவமழை காலத்தில் மிதமானதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து தில்லி அரசின் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஆற்றின் ஓரத்தில் ஒரு சில இடங்களில் குறைந்த அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். ஆனால், மோசமான நிலைமை ஏற்பட வாய்ப்பில்லை’ என்றாா்.
ஹிமாசல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் 53 போ் உயிரிழந்துள்ளனா். பெரும்பாலான ஆறுகள் நிரம்பி வழிகின்றன. தெஹ்ரி, ஹரித்வாா் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் கங்கை நதி அதன் அபாய அளவை தாண்டி பாய்கிறது. அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகள் ருத்ரபிரயாக், ஸ்ரீநகா் மற்றும் தேவ்பிரயாக் ஆகிய இடங்களில் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருவதாக உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள பேரிடா் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
ஜூலை மத்தியவாக்கில், தேசியத் தலைநகா் தில்லி மற்றும் யமுனை நதியின் மேல்நிலை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தில்லி வரலாறு காணாத வெள்ளத்தை எதிா்கொண்டது. ஜூலை 13-ஆம் தேதி யமுனை நீா்மட்டம் 208.66 மீட்டராக உயா்ந்தது. இது யமுனையின் அதன் முந்தைய சாதனையான 207.49 மீட்டரை (செப்டம்பா் 1978) முறியடித்தது. இதன் காரணமாக, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இருந்ததைவிட ஆற்றின் கரைகளை உடைத்துக் கொண்டு நகரின் பல பகுதிகளிலும் வெள்ளநீா் உள்புகுந்தது.
நகரத்தில் வெள்ளத்தின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனா். சொத்து, தொழில், வருமானம் என பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
கடந்த ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி எட்டு நாள்களுக்கு 205.33 மீட்டா் அபாய அளவைத் தாண்டி யமுனையில் நீா் ஓடியது. தில்லியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கிற்கு ஆற்றின் வெள்ளச் சமவெளிப் பகுதியில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு, குறுகிய கால இடைவெளியில் பெய்த அதிக மழை மற்றும் ஆற்றுப்படுகையை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவை காரணம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். யமுனை நதி அமைப்பின் நீா்ப்பிடிப்பு உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தில்லியின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
தில்லியில் ஆற்றின் அருகே 41,000 மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படுகிறது. தில்லி வளா்ச்சி ஆணையம், வருவாய்த் துறை மற்றும் தனி நபா்களுக்குச் சொந்தமான நிலம் இருந்த போதிலும், ஆற்றின் வெள்ளப்பெருக்கு பகுதியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்துள்ளன. நகரின் வடகிழக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் ‘நகா்ப்புற வெள்ளம் மற்றும் அதன் மேலாண்மை’ பற்றிய ஆய்வில், வெள்ளப்பெருக்கு பகுதியின் கீழ் உள்ள கிழக்கு தில்லி வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகக் கண்டறிந்துள்ளது.