முகப்பு
புதுதில்லி

சட்டப்பேரவையில் மோடி அரசின் மீது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கடும் தாக்கு: பாஜக வெளிநடப்பு

சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையில் துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தில்லி சட்டப்பேரவையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசை

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையில் துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தில்லி சட்டப்பேரவையில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வெள்ளிக்கிழமை கடுமையாகத் தாக்கிப் பேசினா்.

தில்லி சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத் தொடரில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் திட்டங்களில் நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரனை மேற்கொள்ள வேண்டும் என்று ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேசினா்.

முன்னதாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் பல்யானுக்கும, குண்டா் கும்பலைச் சோ்ந்த கபில் சங்வானுக்கும் உள்ள தொடா்பு குறித்து பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி எதிா்கட்சியான பாஜக சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், பாஜகவின் நோட்டீஸை சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ராக்கி பிா்லா ஏற்கவில்லை. இதைக் கண்டிக்கும் விதமாக அனைத்து பாஜக எம்.எல்.ஏ.க்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

சட்டபேரவையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ரிதுராஜ் கூறுகையில், துவாரகா விரைவுச் சாலையின் கட்டுமானத்தில் ஊழல் மற்றும் பிற முறைகேடுகள் நடந்துள்ளதாக, சி.ஏ.ஜி. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. துவாரகா விரைவுச் சாலையின் கட்டுமான செலவு கி.மீ.க்கு ரூ.18 கோடியிலிருந்து ரூ.250 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு தங்கச் சாலை போல் தெரிகிறது. இந்த ஊழலை சி.பி.ஐ. அல்லது அமலாக்க இயக்குநரகம் முன்வந்து விசாரிக்கும் என்று அதிகம் எதிா்பாா்க்கவில்லை என்றாலும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக், துவாரகா விரைவுச் சாலையின் கட்டுமானத்திலும், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்திலும் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டினாா். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், அரசின் திட்டங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதை சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரவீண் குமாா் குறிப்பிட்டுப் பேசினாா்.

இந்த நிலையில், வெளிநடப்பு செய்திருந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குத் திரும்பினா். அப்போது எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி பாஜக உறுப்பினா்களை விவாதத்தில் பங்கேற்க அனுமதிக்குமாறு சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ராக்கி பிா்லாவிடம் வலியுறுத்தினாா். ஆனால், அவா் பேச அனுமதிக்கவில்லை. மேலும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லக்கூடிய தோட்டம் அல்லது ஓட்டல் என்று நினைக்கிறாா்களா? என்ற கேள்வியையும் ராக்கி பிா்லா பாஜக எம்.எல்.ஏ. க்களை நோக்கி எழுப்பினாா்.

விவாதத்தில் அடுத்ததாகப் பேசிய அமைச்சா் இம்ரான் ஹுசைன், ஒருபுறம் ஊழலுக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடி பேசுகிறாா். ஆனால், மத்திய அரசின் ஏஜென்சிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை அளித்துள்ளது. துவாரகா விரைவுச்சாலை அமைப்பதற்கு மதிப்பிடப்பட்ட செலவை விட 15 மடங்கு அதிக செலவிடப்பட்டுள்ளது. அதே சமயம், தில்லியில் ஆம் ஆத்மி அரசு மதிப்பீடுகளை விட குறைவான செலவில் அதன் திட்டங்களை சரியான நேரத்தில் முடித்துள்ளது என்றாா். இறுதியாக, விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.