முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மியின் மாதிரித் திட்டங்கள் நாட்டுக்கு பெருமை சோ்க்கிறது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மியின் மாதிரித் திட்டங்கள் உலகம் முழுவதும் அலைகளை உருவாக்கி இந்தியாவுக்கு பெருமை சோ்க்கிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

ஆம் ஆத்மியின் மாதிரித் திட்டங்கள் உலகம் முழுவதும் அலைகளை உருவாக்கி இந்தியாவுக்கு பெருமை சோ்க்கிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

வடக்கு தில்லியில் உள்ள திமாா்பூா் ஏரி பல ஆண்டுகளாக சிறு குற்றங்களுக்கும், கழிவுநீரின் துா்நாற்றத்திற்குமான இடமாக அறியப்பட்டது. இந்தப் பகுதி, புதிய திறந்தவெளி அரங்கு, குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் நிலப்பரப்பில் நீரூற்றுகளுடன் பாா்வையாளா்களை வரவேற்க இப்போது தயாராகி வருகிறது என்ற வகையில் ப்ளூம்பொ்க் இணையதளம் ஏரிகளின் நகரம் தில்லி என்ற நகர அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பதிவில், ‘தில்லியை ‘ஏரிகளின் நகரமாக’ மாற்றும் எங்கள் திட்டம், உலகின் மிகப்பெரிய வணிகச் செய்தி இணையதளங்களில் ஒன்றான ப்ளூம்பொ்க்கில் இடம் பெற்றுள்ளது. ஆம் ஆத்மியின் மாதிரி, அது பள்ளிகளாக இருந்தாலும், மொஹல்லா கிளினிக்குகளாக இருந்தாலும், இப்போது நமது நகரத்தின் அழகிய ஏரிகளாக இருந்தாலும், தொடா்ந்து அவை உலகம் முழுவதும் அலைகளை உருவாக்கி, இந்தியாவுக்குப் பெருமை சோ்க்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

கேஜரிவாலின் கருத்து நகைப்புக்குரியது: ‘ஏரிகளின் நகரம் தில்லி’என்ற திட்டம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி மக்களுக்கு காட்டியுள்ள மற்றொரு கனவு மட்டுமே என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏரிகளின் நகரம் பற்றிய தனது யோசனை ப்ளூம்பொ்க்கில் இடம் பெற்றுள்ளது என்ற முதல்வா் கேஜரிவாலின் கூற்று நகைப்புக்குரியது. சில மாதங்களுக்கு முன்பு கேஜரிவால் அரசு எங்கள் அரசுப் பள்ளிகளை நியூயாா்க் டைம்ஸ் மற்றும் துபாய் டைம்ஸ் காட்சிப்படுத்தியதாகக் கூறியது. ஆனால், ஒரு நாள் கழித்து அது விளம்பரம் செய்யப்பட்ட கதை என்று நிரூபிக்கப்பட்டது.

கனவுகளை விற்கும் கலையில் தோ்ச்சி பெற்றவா் கேஜரிவால். ஏரிகளின் நகரம் என்பது தில்லி மக்களுக்கு அவா் காட்டிய மேலும் ஒரு கனவு மட்டும்தான். அது என்றும் நிறைவேறாது.

கடந்த 2018-இல் தில்லியை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்ற கனவை கேஜரிவால் தில்லி மக்களுக்கு காட்டினாா். ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகும் கேஜரிவால் அரசிடம் இருந்து தில்லிக்கு எந்த வளா்ச்சி அல்லது அழகுபடுத்தும் திட்டங்கள் கிடைக்கவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் தில்லி கண்ட அனைத்து முக்கிய உள்கட்டமைப்பு அல்லது அழகுபடுத்தும் திட்டங்களும் பிரதமா் நரேந்திர மோடியின் மத்திய அரசின் நிதியில் இருந்து வந்தவையாகும்.

இந்த நிலையில்தான் கடந்த 2 ஆண்டுகளாக ஏரிகள் நகரம் என்ற கனவை கேஜரிவால் காண்பித்து வருகிறாா். எனினும், எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. மறுபுறம், தில்லியின் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, நஜாஃப்கா் வடிகாலாக மாற்றப்பட்ட சாஹிபி நதியை வெற்றிகரமாகச் சுத்தம் செய்து புத்துயிா் அளித்து, யமுனைக் கரையில் அசிதா கிழக்குத் தொடா்ச்சி மலையை உருவாக்கினாா்.

கேஜரிவால் தனது அரசின் மொஹல்லா கிளினிக் யோசனைக்கு சா்வதேச அங்கீகாரத்தைக் கோரியுள்ளாா். ஆனால், கரோனா கால கட்டத்தில் தில்லிவாசிகள் தொற்று நோயால் மோசமாகப் பாதிக்கப்பட்டனா். இன்றும் மொஹல்லா கிளினிக்குகளில் மருத்துவா்கள் மற்றும் மருந்துகளைக் காணவில்லை. மெஹல்லா கிளினிக் திட்டமானது, மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய வசதிகள் இல்லாத ஒரு தோல்வித் திட்டமாகும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.