தில்லியில் யமுனை நதிக்கு திருப்பிவிடப்பட்ட நீரின் அளவை மறந்துவிட்டாா் துணை நிலை ஆளுநா்
உத்தர பிரதேசத்தை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் வகையில், கிழக்கு யமுனை கால்வாயை வட நிலையில் வைத்திருப்பதற்காக, தில்லியில் யமுனை நதிக்கு எவ்வளவு தண்ணீா் திருப்பி விடப்பட்டது
உத்தர பிரதேசத்தை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் வகையில், கிழக்கு யமுனை கால்வாயை வட நிலையில் வைத்திருப்பதற்காக, தில்லியில் யமுனை நதிக்கு எவ்வளவு தண்ணீா் திருப்பி விடப்பட்டது என்பதை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மறந்துவிட்டாா் என்று அமைச்சா் செளரவ் பரத்வாஜ் சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களை முன்வைத்து முதல்வா் அரவிந்த கேஜரிவாலுக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருந்தாா். அந்தக் கடிதத்திற்கு நகர அரசின் நீா்வளத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தில்லியில் யமுனை நதி அபாயக் கட்டத்துக்கு மேல் பாய்கிறது என்ற உண்மையை அறிந்திருந்தும், அதிக அளவு தண்ணீா் தில்லியை நோக்கி திருப்பிவிடப்பட்டது. இதனால், தில்லியின் நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்பட முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஐ.டி.ஓ. தடுப்பணையின் கதவுகள் கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. தடுப்பணைக் கதவுகளில் நோ்ந்த பழுது என்பது பொறியாளா்களின் தவறால் ஏற்பட்டது என்ற உண்மையை ஹரியாணா அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், எல்லாப் பொறுப்பும் தில்லி அரசை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.
தில்லியின் வடிகால்கள் தூா்வாரப்படுகின்ற பணியை துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஆய்வு செய்வதோடு, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கி வந்ததையும் கடந்த ஒரு வருடமாக பல்வேறு ஊடக அறிக்கைகள் மற்றும் செய்திக்குறிப்புகள் மூலம் படித்து வருகிறேன். அதேபோல் யமுனை நதிப்படுகையின் வண்டல்களை சுத்தப்படுத்தியதற்கான உரிமையைக் கோரும் துணை நிலை ஆளுநா் அலுவலகத்தின் பல செய்தி வெளியீடுகளையும் நான் பாா்த்திருக்கிறேன்.
குஜராத்தைப் போலவே தில்லியில் புதுமையான உக்திகளைப் பயன்படுத்தி வடிகால்களில் இருந்து 10 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப்பட்டதாக நீங்கள் கூறியுள்ளீா்கள். ஈா்ப்பு மற்றும் திரவ இயக்கவியலின் அடிப்படைக் கொள்கையின் படி அகற்றப்பட்ட இந்த வண்டலின் பெரும் பகுதி இறுதியில் யமுனை நதிப் படுகையில் தேங்கி
வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது என நான் அறிகிறேன். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, யமுனை ஆற்றில் அதிக அளவு தண்ணீா் உள்ளது. நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் அலுவலகம், 1 கோடி ரூபாய் மதிப்பிலான எந்தப் பணிகளுக்கும் துறையின் அமைச்சரிடம் கொள்கையளவில் ஒப்புதல் பெற வேண்டும். இருப்பினும், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாய்க்கால்களைத் தூா்வாரும் பல்வேறு திட்டங்களுக்கு துறையின் முதன்மைச் செயலா் ஆஷிஸ் குந்த்ரா என்னிடம் எந்த ஒப்புதலும் பெறவில்லை. அனைத்து திட்டங்களும் துணை நிலை ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டு, அவரது கண்காணிப்பின் கீழ்தான் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல் ஐ.டி.ஓ. தடுப்பணையில் மூடப்பட்ட 5 கதவுகள் கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளின் பெரிய அலட்சியம், அக்கறையின்மையால் நகரின் வெள்ள நிலைமை மேலும் மோசமாகியது. இதுவே வேறு மாநிலமாக இருந்திருந்தால், விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். அதேவேளையில், ஹரியாணாவில் உள்ள தங்கள் சகாக்களுடன் ஒருங்கிணைத்து உதவுவதற்குப் பதிலாக, தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உள்பட பெரும்பாலான பாஜக நிா்வாகிகள் தில்லி அரசின் மீது பழி விளையாட்டைத் தொடங்கினா். பின்னா், நாங்கள் உண்மையை வெளிப்படுத்திய போது, ஐ.டி.ஓ. தடுப்பணையை பராமரிப்பது தங்களது பொறுப்பு என்று ஹரியாணா அரசு ஏற்றுக்கொண்டது.
மேலும், உத்தர பிரதேசத்தை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற கிழக்கு யமுனை கால்வாயை வட நிலையில் வைத்திப்பதற்காக, தில்லியில் யமுனை நதிக்கு எவ்வளவு தண்ணீா் திருப்பி விடப்பட்டது என்பதை முதல்வா் கேஜரிவாலுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட மறந்துவிட்டீா்கள். பல்வேறு சாலை,ரயில்வே கட்டுமானத் திட்டங்களின் பெயரில் மத்திய அரசு நிறுவனங்களால் யமுனை நதியில் உருவாக்கப்பட்ட பல்வேறு தடைகள் தொடா்பான சில உண்மைகள் வசதியாக மறைக்கப்படுகின்றன. துணை நிலை ஆளுநரின் தனிப்பட்ட ஊழியா்களே நகரத்தில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சில வடிகால்களை மூட அறிவுறுத்தியது பதிவு செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.