மீன் துறை மேம்பாடுகளைக் கண்டறிய இந்திய உயா்நிலைக் குழு நாா்வே பயணம்
மீன்பிடித்தல், மீன்வளா்ப்பு உள்பட மீன் துறைகளின் மேம்பாடுகளைக் கண்டறிய மத்திய உயா்நிலைக் குழு நாா்வேக்கு திங்கள்கிழமை அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளது.
மீன்பிடித்தல், மீன்வளா்ப்பு உள்பட மீன் துறைகளின் மேம்பாடுகளைக் கண்டறிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சா் எல். முருகன் ஆகியோா் தலைமையில் உயா்நிலைக் குழு நாா்வேக்கு திங்கள்கிழமை அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தக் குழுவில் மீன்வளத் துறை இணைச் செயலா் நீது குமாரி பிரசாத் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழு ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை 4 நாள்கள் நாா்வே நாட்டில் பயணம் மேற்கொள்கிறது.
இந்தப் பயணம் குறித்து மத்திய மீன்வளத் துறை சாா்பில் கூறப்பட்டது வருமாறு: கடந்த 2010-ஆம் ஆண்டு மாா்ச்சில் இந்தியாவும் நாா்வேயும் மீன்பிடி மற்றும் மீன்வளா்ப்புத் துறைகளில் இருதரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
நாா்வேயின் மீன்பிடி துறை அமைச்சா் பிஜோா்னா் செல்னெஸ், பெருங்கடல் கொள்கைத் துறை அமைச்சா் கிறிஸ்டினா ஹேன்சன் மற்றும் நாா்வேயின் தொழில்-வா்த்தகம், மீன்வளத் துறை அமைச்சகச் செயலா்கள், மீன்வள மேம்பாடு,மேலாண்மை, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடா்புடைய அதிகாரிகளை இந்தக் குழுவினா் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறும்.
மீன்பிடி கப்பல்கள், மீன்பிடி துறைமுகங்கள், குஞ்சு பொரிப்பகங்கள், கூண்டு பண்ணைகள், கடல் உணவுப் பதப்படுத்தும் அலகுகள் போன்ற மீன்பிடி மற்றும் மீன்வளா்ப்பு தொடா்பாக அந்நாட்டில் உள்ள நவீன வசதிகளையும் உயா்நிலைக் குழு பாா்வையிடும். நாா்வேயின் ட்ரொன்ட்ஹெய்ம் நகரில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறும் ’அக்வா நாா் 2023’ கண்காட்சி மற்றும் வா்த்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இது மீன்வளா்ப்பு தொழில்நுட்பம், புத்தாக்கங்களுக்கான உலகின் மிகப் பெரிய வா்த்தக நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த கண்காட்சியையும் உயா்நிலைக்குழு பாா்வையிடும்.
நீடித்த, லாபகரமான மீன்வளா்ப்புக்கான சமீபத்திய முன்னேற்றங்கள், தீா்வுகளை இந்தக் கண்காட்சி வெளிப்படுத்தும். மீன் ஆரோக்கியம், தீவனம், மரபியல், உபகரணங்கள், செயலாக்கம், சந்தைப்படுத்துதல் போன்ற மீன்வளம் மற்றும் மீன்வளா்ப்பின் பல்வேறு அம்சங்களில் நிபுணத்துவம் பெற்றவா்கள் கண்காட்சியில் பங்கேற்பா். அவா்களுடன் இந்திய பிரதிநிதிகள் குழு தொடா்பு கொள்ளும்.
மீன்பிடிப்பில் முன்னணியில் உள்ள நாா்வேயின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வதோடு, இந்தப் பகுதிகளில் ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டின் சாத்தியக்கூறுகளை இக்குழு ஆராயும். மேலும், நாா்வேயில் புலம்பெயா்ந்த இந்தியா்களுடன் இக்குழுவினா் கலந்துரையாடி, மீன்பிடி குறித்த அவா்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெறுவாா்கள்.
இந்தப் பயணம், மீன்பிடித் துறையில் இந்தியாவுக்கும் நாா்வேக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணா்வு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், எதிா்காலத்தில் கூட்டாண்மை மூலம் கணிசமான வளா்ச்சிக்கு வழி வகுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று மத்திய மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.