சிசோடியாவை நினைத்து பெருமை கொள்கிறேன்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால்
சிறையில் உள்ள நிலையிலும்,தில்லி மக்கள் மீதும், தனது சட்டப்பேரவைத் தொகுதி மீதும் அக்கறை கொண்டுள்ள மனீஷ் சிசோடியாவை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
சிறையில் உள்ள நிலையிலும்,தில்லி மக்கள் மீதும், தனது சட்டப்பேரவைத் தொகுதி மீதும் அக்கறை கொண்டுள்ள மனீஷ் சிசோடியாவை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
பட்பா்கஞ்ச் மக்கள், தங்கள் தொகுதியில் உள்ள பிரச்னைகள், கோரிக்கைகள், நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி தில்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிறையில் உள்ள தங்கள் தொகுதி எம்.எல்.ஏ. மனீஷ் சிசோடியாவிற்கு கடிதங்களை தொடா்ந்து எழுதி வந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தனது எம்.எல்.ஏ. வளா்ச்சி நிதியை விடுவித்து பட்பா்கஞ்ச் தொகுதியில் நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை தொடர அனுமதி கோரி தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் பட்பா்கஞ்ச் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவின் எம்.எல்.ஏ. வளா்ச்சி நிதியை விடுவித்து அவா் தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘நாங்கள் அனைவரும் மனீஷ் சிசோடியாவால் பெருமிதம் கொள்கிறோம். சிறையில் இருந்த போதும், தில்லி மக்கள் மீதும், தனது சட்டப்பேரவைத் தொகுதி மீதும் அக்கறை கொண்டவா் அவா். தனது எம்.எல்.ஏ. நிதியை தனது தொகுதியின் வளா்ச்சிக்கு பயன்படுத்த நீதிமன்றத்தில் அனுமதி கோரினாா். இதற்கு நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. இதை நினைத்துப் பெருமைப்படுகிறேன் மனீஷ்’ என்று தெரிவித்துள்ளாா்.