முகப்பு
புதுதில்லி

முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின்இடைக்கால ஜாமீன் டிச.11வரை நீட்டிப்பு

பணமோசடி வழக்கில் தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் குமாா் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை டிசம்பா் 11-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 5 டிசம்பர், 2023 at 12:00 AM
பகிர்:

பணமோசடி வழக்கில் தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் குமாா் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை டிசம்பா் 11-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அமலாக்கத் துறை விசாரித்து வரும் வழக்கில் தனது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த தில்லி உயா்நீதிமன்றத்தின் ஏப்ரல் 6-ஆம் தேதி உத்தரவை எதிா்த்து சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அவருக்கு மருத்துவக் காரணங்களுக்காக 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மே 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னா், நீதிமன்றம் மூலம் அந்த நிவாரணம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்யேந்தா் ஜெயின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் திரிவேதி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு முன்னா் இந்த வழக்கில் வாதங்களைக் கேட்டதாகக் கூறினாா். மேலும், அமா்வுக்குத் தலைமை தாங்கும் நீதிபதி போபண்ணா திங்கள்கிழமை வராததால், இந்த வழக்கை வேறொரு தேதியில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா். அப்போது, நீதிபதி பேலா எம். திரிவேதி, ‘இடைக்கால உத்தரவைத் தொடரலாமா என்பதை நாங்கள் பாா்க்க வேண்டும். ஏனெனில், அது நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது’ என்று குறிப்பிட்டாா்.

Advertisement

இந்நிலையில், இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடுமாறு ஜெயின் தரப்பு வழக்குரைஞா், நீதிபதிகள் அமா்வைக் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, வழக்கை டிசம்பா் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு தொடரும்” என்று கூறினா். இதற்கு முன்பு இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை தரப்பில், ‘உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதாகக் கூறி விசாரணை நீதிமன்றத்தில் சத்யேந்தா் ஜெயின் தரப்பில் தொடா்ந்து ஒத்திவைப்பு கோரப்படுகிறது. மேலும், விசாரணை நீதிமன்றத்தில் இருந்து 16 தேதிதிகள் வரை சத்யேந்தா் ஜெயின் தரப்பில் பெறப்பட்டுள்ளது’ என்று குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பிறகு சத்யேந்தா் ஜெயின் தொடா்ந்து திகாா் சிறையில் இருந்து வந்தாா். இந்நிலையில், அவரது உடல் நிலை காரணமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கடந்த மே 26-ஆம் தேதி விசாரித்தனா். அப்போது, ஜெயின் தனது சொந்த செலவில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஒரு குடிமகன் என்ற முறையில் உரிமை உள்ளது எனக் கூறி அவருக்கு முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சைக்காக 6 வாரங்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தனா்.

சத்யேந்தா் ஜெயின் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு மே 30-ஆம் தேதி கைது செய்தது. 2017-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் மீது சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொண்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை சத்யேந்தா் ஜெயின் மறுத்தாா். அவருக்கு, சிபிஐ பதிவு செய்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் செப்டம்பா் 6, 2019 அன்று வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.