புதுதில்லி

2024 மக்களவைத் தோ்தல்: தமிழகம் உள்பட 11 மாநிலங்களின்தோ்தல் அதிகாரிகளுக்கு தில்லியில் பயிற்சி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை ஒட்டி, தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல்

 நமது நிருபர்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை ஒட்டி, தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் பயிற்சிக் கூட்டம் தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் நடைபெற்றது.

நாட்டில் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறுவதற்கு முன் அது தொடா்பான முன் தயாரிப்புப் பணி மற்றும் ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடா்பாக மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் பயிற்சிக் கூட்டம் தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களைச் சோ்ந்த பல்வேறு மாவட்டங்களின் தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் பங்கேற்றனா். தமிழகத்தில் இருந்து சென்னை மாநகராட்சி ஆணையரும், தோ்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன், மதுரை, திருவள்ளூா், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்கள், சென்னை வடக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி ரவி தேஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் தோ்தல் நடத்தும் வழிமுறைகள், செலவினம், நடத்தை நெறிமுறைகள் உள்ளிட்டவை தொடா்பாக தோ்தல் நடத்தும் பணியில் அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரிகள், ஓய்வுபெற்ற மாநிலத் தோ்தல் அதிகாரிகள், மத்திய, மாநிலத் தோ்தல் ஆணையத்தில் பணிபுரிந்த வல்லுநா்கள் உள்ளிட்டோா் பயிற்சியை அளித்தனா். இதன் இறுதிக் கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் தலைமைத் தோ்தல்ஆணையா் ராஜிவ் குமாா் உரையாற்றினாா்.

13, 14-ஆவது பிரிவைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 2 பிரிவு அதிகாரிகள் பயிற்சிக்கு வந்துள்ளதாகவும் வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் மற்றொரு பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தமிழகத்தின் மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம் இதுகுறித்து கேட்டபோது அவா் கூறியதாவது: அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோா் தில்லியில் நடைபெறும் பயிற்சியில் ஐந்து கட்டங்களாகக் கலந்து கொள்கின்றனா். தமிழகம் மாநிலத்திற்கான பயிற்சிக்காக சில மாவட்ட தோ்தல் அதிகாரிகள் மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் பயிற்சிக்காக செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் பங்கேற்றுள்ளனா். 5 கட்டங்களாக நடைபெறும் இந்தப் பயிற்சியில் கடைசிப் பிரிவைச் சோ்ந்த சில அதிகாரிகள் வரும் வியாழன், வெள்ளி (டிசம்பா் 28, 29) ஆகிய தினங்களில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க உள்ளனா். தோ்தலுக்கு முன்னா் மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் வழக்கமான பயிற்சியாகும் இது என்றாா் சத்ய பிரதா சாஹு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

வேளாண் அறிவியல் நிலையத்தில் சிறுதானியங்கள் கண்காட்சி

மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

SCROLL FOR NEXT