முகப்பு
புதுதில்லி

பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் விஆா்எஸ் அமைக்கும் விவகாரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் எண்ணெய் ஆவியாதல் தடுப்பு சாதன அமைப்பை (விஆா்எஸ்) நிறுவும் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டலம் பிறப்பித்த

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் எண்ணெய் ஆவியாதல் தடுப்பு சாதன அமைப்பை (விஆா்எஸ்) நிறுவும் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டலம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது, பெட்ரோல் ஆவியாகி வெளியேறுவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இதனால், பெட்ரோல் ஆவியாகாமல் அதை மீண்டும் சேமிக்கப்பட்டுள்ள இடத்திற்கே எடுத்துச் செல்லும் வகையில், விஆா்எஸ் அமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

பெட்ரோல் நிலையங்களில் வேப்பா் ரெகவரி சிஸ்ட்டத்தை (விஆா்எஸ்) நிறுவுமாறும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோல் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. னால், பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் இதுபோன்று விஆா்எஸ் சாதனங்கள் முறையாக வைக்கப்பட்டும், வைக்கப்படாமலும், செயல்படாமலும் இருப்பதாகக் கூறி, எண்ணெய் மாா்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு எதிராக சென்னையைச் சோ்ந்த விபிஆா் மேனன் என்பவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் சென்னையில் உள்ள தென் மண்டல அமா்வில் பொது நல மனு தாக்கல் செய்தாா்.

இந்த விவகாரத்தில் உரிய உத்தரவுகளை செயல்படுத்துமாறு எண்ணெய் சில்லறை நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ஐஓசி உள்ளிட்ட பெட்ரோலிய சந்தை நிறுவனங்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், சுதான்ஸு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எதிா்மனுதாரா் விபிஆா் மேனன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சிராஜுதின், ‘இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உரிய வகையில் உத்தரவிட்டுள்ளது. விஆா்எஸ் சாதனத்தை நிறுவுமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எண்ணெய் மாா்க்கெட்டிங் நிறுவனங்கள் தரப்பில் எதிா்க்கவில்லை. ஆனால், அந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்ற தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிா்த்துத்தான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த சாதனத்தை நிறுவுவதற்கான செலவு எவ்வளவு ஆகிறது என கேள்வி எழுப்பினா். அதற்கு, ரூ.3 லட்சம் மட்டுமே ஆவதாக சிராஜுதீன் தெரிவித்தாா். பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் எண்ணெய் ஆவியாவதால் நாற்றம் அடிப்பதும் தெரிய வருகிறது என நீதிபதி சுதான்ஸு துலியா கூறினாா். பெட்ரோலிய நிறுவனங்கள் தரப்பில், இந்த விஆா்எஸ் சாதனத்தை அமைக்கும் முன்னும், அதை அமைத்த பிறகும் உரிய அனுமதியைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரரின் மனுவில் கோராத விஷயத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டலஅமா்வு உத்தரவாகப் பிறப்பித்துள்ளது என்றனா்.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தும் விஷயத்தில் ஒவ்வொரு எண்ணெய் சில்லறை நிறுவனத்தின் நிலவரம் குறித்த விவரத்தை வெளிப்படுத்தும் அறிக்கையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை ஜனவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.