முகப்பு
புதுதில்லி

‘2020’ தில்லி கலவரம்: தாஹிா் உசேன் மீது குற்றச்சாட்டு விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் உசேன் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, விசாரணையைத் தொடங்குவதற்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் உசேன் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, விசாரணையைத் தொடங்குவதற்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

2020-இல் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பாக அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த பணமோசடி வழக்கில் தாஹிா் உசேன் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கடந்த நவம்பா் 3-இல் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இந்த நிலையில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் கூறுகையில், ‘அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவின் கீழ் குற்றத்திற்கான குற்றச்சாட்டு, சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் பிரிவு 4-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகள் குற்றம்சாட்டப்பட்ட தாஹிா் உசேனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து படித்து, விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு தாம் குற்றமற்றவா் எனக் கூறிய அவா், விசாரணைக்கு கோரியுள்ளாா்’ என்றாா்.

பிஎம்எல்ஏ பிரிவு 3 பணமோசடி குற்றத்தை வரையறுக்கிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் முன்னா் நீதிமன்றம் தெரிவிக்கையில், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக, ஹுசேனுக்கு எதிராக கடுமையான சந்தேகத்தை உருவாக்கும் வகையில், போதுமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான முகாந்திரம் உள்ளது. தாஹிா் உசேன் தனக்குச் சொந்தமான அல்லது அவருக்குச் சொந்தமான சில நிறுவனங்களின் கணக்குகளில் இருந்து போலியான மற்றும் தவறான பரிவா்த்தனைகள் மூலம் பணத்தை மோசடியாக எடுத்துள்ளாா் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பாக தாஹிா் உசேன் மற்றும் பிறருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தில்லி காவல் துறை மூன்று எஃப்ஐஆா்களை பதிவு செய்துள்ளது. இதில் கூறப்பட்ட குற்றங்களின் அடிப்படையில், பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடங்கப்பட்டன. மாா்ச் 9, 2020-ஆம் தேதி அமலாக்க இயக்குனநகம் வழக்கு தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

இதற்கிடையில், மருத்துவ காரணங்களுக்காக பரோல் கோரி தாஹிா் உசேன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கின் போது, தாஹிா் உசேனின் இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று திகாா் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பித்தனா். ஜனவரி 7-ஆம் தேதி தாஹிா் உசேனின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றம் கோரியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.