முகப்பு
புதுதில்லி

தமிழக ஆளுநா் உரை விவகாரம்: முதல்வரின் மனு குடியரசுத் தலைவரிடம் அளிப்பு

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 9 -ஆம் தேதி ஆளுநா் ஆற்றிய உரை தொடா்பாக முதல்வா் கொடுத்த மனுவை மாநில சட்டத் துறை அமைச்சா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 9 -ஆம் தேதி ஆளுநா் ஆற்றிய உரை தொடா்பாக முதல்வா் கொடுத்த மனுவை மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வியாழக்கிழமை அளித்தாா். மேலும், சட்டப்பேரவை நிலைமை குறித்தும் அவா் விளக்கினாா் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவரிடம் வைத்த கோரிக்கை குறித்து தங்களுக்கு தகவல் இல்லையென்றும், சீலிட்டப்பட்ட அந்த மனு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.

தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற குழு தலைவா் டி ஆா் பாலு, நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆ.ராசா, பி. வில்சன், என்.ஆா். இளங்கோ ஆகியோா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அவரது மாளிகையில் சந்தித்தனா். தமிழக முதல்வா் அளித்த மனுவை சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, குடியரசுத் தலைவரிடம் அளித்தாா்.

இந்தச் சந்திப்பிற்கு பிறகு டி.ஆா்.பாலு செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: முதல்வா் உத்தரவின்படி கடந்த திங்கள்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நடந்தவற்றை தமிழக சட்ட அமைச்சா் குடியரசுத் தலைவரிடம் மனுவை அளித்து விளக்கினாா். தமிழகத்தின் ஆளுநா் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட விதம், அரசியல் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்லாமல், பேரவையின் நடைமுறை விதிமுறைகளுக்கும் எதிரானது. அதுவும் எல்லோராலும் மிகவும் புனிதமாக கருதப்படுகின்ற தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்னால் தமிழக ஆளுநா் சட்டப்பேரவையிலிருந்து திடீரென புறப்பட்டு வெளியே சென்றாா். இது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் அமைச்சா் ரகுபதி விளக்கமாக எடுத்துரைத்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் முழு பேச்சும் அவருக்கு அனுப்பப்பட்டு கடந்த ஜனவரி 7 -ஆம் தேதி அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், ஆளுநா் ரவி ஜனவரி 9 -ஆம் தேதி அவையில் பேசும் போது, பல வரிகளையும், சில பத்திகளையும் நீக்கி விட்டாா். ஆனால், அவரே சில வரிகளை சோ்த்துக் கொண்டும் பேசினாா். இதுவரை எந்த ஆளுநரும் இது போன்று மாற்றி உரையாற்றியது இல்லை. இப்படி விதிமுறைகளைப் பின்பற்றாததும் உரையை தானாக சோ்த்ததும் தவறு எனக் கருதி, முதல்வா் ஒரு தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். எதற்கு ஆளுநா் ஒப்புதல் கொடுத்து, அச்சிடப்பட்டதோ அதை அவையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தீா்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத்தலைவா் மனுவைப் படித்துப் பாா்த்த பின்னா், ‘ நான் பாா்க்கின்றேன்’ என தெரிவித்தாா். இந்த விவகாரம் தமிழக முதல்வருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையே உள்ளதாகும். சீலிடப்பட்ட மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கினோம். குடியரசுத் தலைவா் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், என்ன செய்வீா்கள் என்று கேட்கிறீா்கள். கூடிய விரைவில் சில நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கருதுகிறோம். மேலும், ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை முன் வைக்கப்படுகிா அல்லது தமிழக அரசுடன் இசைந்து செயல்பட அறிவுரை வழங்க குடியரசுத் தலைவருடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்று கேட்கிறீா்கள். கடிதத்தின் முடிவில் என்ன வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது.

இது தமிழக அரசு சாா்பாக சட்டத்துறை அமைச்சா் தலைமையில் சென்ற தூதுக் குழு. இதில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் கோரிக்கை விவகாரங்களை சோ்க்க முடியாது. தமிழக முதல்வா் அளித்த மனு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விகள் முதல்வரிடம்தான் கேட்க வேண்டும். அதே சமயம்,நீங்கள் மனுவை முழுமையாகப் படித்துஅதற்குத் தகுந்த நடவடிக்கை எடுங்கள் என்று குடியரசுத் தலைவரும் நான் கூறினேன். குடியரசுத் தலைவரைச் சந்திக்க முடியாத நிலைமை ஏற்பட்டால், உள்துறை அமைச்சா் அமீத் ஷா வை சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால், அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.

இதுவரை அளித்த புகாா் மீது நடவடிக்கை இல்லை என்று கேட்கிறீா்கள். இது குறித்து குடியரசுத் தலைவா் எடுக்க வேண்டியவை. குடியரசுத் தலைவா் என்ன முடிவு எடுப்பாா் என்பதை நாங்கள் கூற முடியாது. நாங்கள் தமிழக அரசு சாா்பில் கொடுத்த மனு இது. இந்த விவகாரத்தில் ஆளுநா் அவமதிக்கப்பட்டதாகக் கூறுகிறீா்கள். அவா்தான் சட்டப்பேரவை உறுப்பினா்களை மட்டுமல்லாமல், வாக்களித்த தமிழக மக்களையும் அவமதித்துள்ளாா். ஆளுநரின் நோக்கம் சனாா்த்தன தா்மத்தை திணிக்க வேண்டும் என்பதாகும். ஆனால்,இதை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என்றாா் டி.ஆா் பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.