துணைநிலை ஆளுநருக்கு எதிரான ஆம் ஆத்மி பேரணி ‘விரும்பத்தகாதது’: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கருத்து
ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் நடத்திய போராட்டத்தை மத்திய அரசு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை கவனத்திற்கு கொண்டு வந்தது. இந்த ஆா்ப்பாட்ட பேரணி ‘விரும்பத்தகாதது‘ என்றும் மத்திய அரசின
தில்லி அரசின் பணிகளில் துணை நிலை ஆளுநா் அலுவலகம் தலையிடுவதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் நடத்திய போராட்டத்தை மத்திய அரசு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை கவனத்திற்கு கொண்டு வந்தது. இந்த ஆா்ப்பாட்ட பேரணி ‘விரும்பத்தகாதது‘ என்றும் மத்திய அரசின் சாா்பில் குறிப்பிடப்பட்டது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, மத்திய அரசு - தில்லி அரசு சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடா்பாக சா்ச்சையை விசாரிக்கும் நிலையில், மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இந்த பிரச்சினையை எழுப்பினாா்.
கடந்த திங்கள்கிழமை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள், மக்களால் தோ்வுசெய்யப்பட்ட தில்லி அரசின் செயல்பாட்டில் தலையிடுவதாகக் கூறி துணை நிலை ஆளுநா் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனா். இது குறித்து துஷாா் மேத்தா குறிப்பிடுகையில், ‘இது ஒரு எச்சரிக்கையாக உள்ளது.
நான் சட்டப்பூா்வ சமா்ப்பிப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு குறிப்பிடுகிறேன். உங்கள் முன்பு உள்ள விவகாரத்தில் சில நிகழ்வுகள் தேசியத் தலைநகரில் நடக்கின்றன. சில போராட்டங்கள் நடத்தப்படுகின்றன’ என்று குறிப்பிட்டாா்.
முதலில் இந்த எதிா்ப்புகள் ‘விரும்பத்தகாதவை’ என்றும் அவா் அமா்வு முன்பு குறிப்பிட்டாா், ‘அரசியலமைப்பு அமா்வு விசாரிக்கும் போது, போராட்டங்களும், நாடகங்களும் நடக்க முடியாது... தலைநகரில் சில விஷயங்கள் நடக்கின்றன’ என்றும் நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமாகோலி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோா் அடங்கிய அமா்வில் துஷாா் மேத்தா தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம்.சிங்வி, ‘அவா் சொல்வதை விட நான் அதிகம் கூற வேண்டும்’ என்று அமா்வு முன்பு விளக்கம் கூறினாா். பள்ளி ஆசிரியா்களை பயிற்சிக்காக பின்லாந்துக்கு அனுப்பும் தில்லி அரசின் முன்மொழிவு, துணை நிலை ஆளுநா் சக்சேனாவால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறி பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.