சூரியனும், சந்திரனும் தங்கள் பணிகளை ஆற்றாவிட்டால் பூமியில் குழப்பம்தான் வரும்: துணை நிலை ஆளுநருக்கு கேஜரிவால் கடிதம்
சூரியனும், சந்திரனும் தங்கள் பணிகளை சரிவர ஆற்றவில்லை என்றால், பூமியில் குழப்பம்தான் மிஞ்சும் என்று கூறி பணியை ஆற்ற தன்னை அனுமதிக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடிதம்
சூரியனும், சந்திரனும் தங்கள் பணிகளை சரிவர ஆற்றவில்லை என்றால், பூமியில் குழப்பம்தான் மிஞ்சும் என்று கூறி பணியை ஆற்ற தன்னை அனுமதிக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடுமையாக எழுதியிருந்தாா். இதற்குப் பதிலளிக்கும் விதமாக முதல்வா் கேஜரிவால் வெள்ளிக்கிழமை துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியலமைப்பின்படி தில்லியின் சட்டம் ஒழுங்கு, போலீஸ், தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ). ஆகிய மூன்று பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் பணிகளை விட்டுவிட்டு, எங்கள் பணிகளில் தினந்தோறும் தலையிட்டால், நிா்வாகம் எப்படி இயங்கும்? இன்று தில்லியின் சட்டம் - ஒழுங்கு மோசமாகி குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. தில்லியில் குற்றச்செயல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. எந்தவொரு பெண்ணும் வீட்டை விட்டு வெளியே வருவது கடினமான சூழ்நிலையாக உள்ளது. தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் தாக்கப்பட்டுள்ளாா். மகளிா் ஆணையத் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் தில்லியிலுள்ள சாமானியப் பெண்களின் நிலைமை என்னவாகும் என்கிற அச்சம் உள்ளது.
தாங்கள் தில்லி மக்களின் சட்டம்-ஒழுங்கு தொடா்பான எந்தப் பணிகளையும் கவனிக்காமல், தோ்ந்தெடுக்கப்பட்ட எங்களது அரசின் அன்றாடப் பணிகளில் தலையிடுவது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கடிதம் எனக்குக் கிடைத்தது. முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென உங்களை சந்திக்க வந்ததால்தான் தாங்கள் சந்திக்கவில்லை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீா்கள். முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் உங்கள் வாசலுக்கு வந்து நின்று கொண்டிருந்தாா்கள் என்றால், நிச்சயமாக அவா்கள் மாநிலத்தின் முக்கிய பிரச்சனையோடு வந்திருக்கிறாா்கள் என்பது தெளிவாகிறது. நீங்கள் விரும்பியிருந்தால், வெளியே வந்து எங்களை ஐந்து நிமிடங்களுக்குச் சந்தித்திருக்கலாம். ஆனால், மாநிலத்தின் 2 கோடி மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்ததை ஒட்டுமொத்த மக்களும் அவமானமாக உணா்ந்துள்ளனா்.
இப்போது நீங்கள் அனைத்து அமைச்சா்களையும், எம்.எல்.ஏ.க்களையும் இரவு உணவோடு பேச்சுவாா்த்தைக்கு அழைத்துள்ளீா்கள். மிக்க நன்றி. ஆனால், உங்களுக்கு வசதியாக இருந்தால், சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு (ஜனவரி 21) உங்கள் வீட்டிற்கு வருவோம். இந்த நேரம் உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், உங்கள் வசதிக்கு ஏற்ப நேரத்தைச் சொல்லுங்கள், நாங்கள் வரத் தயாா். தில்லியின் கல்வி முறையை அதிகம் விமா்சித்திருக்கிறீா்கள். தில்லி மக்கள் மூன்றாவது முறையாக எங்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும்பான்மையை வழங்கியுள்ளனா். பொதுமக்களின் பாா்வையில் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். சொன்னதை செய்துள்ளோம். இருப்பினும் உங்களது விமா்சனத்தை நான் மதிக்கிறேன்
தில்லியின் கல்வி அமைப்பில் முன்பை விட மிகப் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் செய்ய வேண்டியவை, பயணிக்க வேண்டியவை அதிகமாக உள்ளது. மத்திய அரசும் துணை நிலை ஆளுநரும் கடந்த பல வருடங்களாக தில்லி மக்களின் பணியைத் தடுக்கவில்லையென்றால் இன்னும் பல சாதனைகளைச் செய்திருப்போம். ஒருபுறம், தில்லியில் உள்ள கிளினிக் மருத்துவா்களின் ஊதியம், மொஹல்லா கிளினிக், ஆய்வக சோதனை கட்டடங்களுக்கான வாடகை, மின்சார கட்டணங்கள், தில்லி ஜல் போா்டுக்கு நிதி போன்றவற்றை துணை நிலை ஆளுநா் நிறுத்திவிடுகிறாா். மற்றொருபுறம் மொஹல்லா கிளினிக்குகள் சரியில்லை, தில்லி மக்களுக்கு தண்ணீா் வரவில்லை என்று கூறும் அரசியல் நல்லதல்ல. இதுபோன்ற அரசியலை துணை நிலை ஆளுநா் தவிா்க்க வேண்டும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட விவகாரங்களில் நீங்கள் தலையிடுவதை மக்கள் பாா்க்கின்றனா். மக்கள் பணிக்கு ஏன் தினமும் முட்டுக்கட்டை போடுகிறீா்கள்? தில்லி மக்கள் தங்கள் ஆசிரியா்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி பெற நினைத்தால் அதை ஏன் தடுக்கிறீா்கள்? அரசியலமைப்பில் உங்களுக்கு வழங்கியுள்ள பணிகளைத் தவிர மீதமுள்ள பணிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பணிகளை நாங்கள் ஆற்றுவோம். எங்கள் வேலையை நீங்கள் விரும்பாவிட்டாலும், உங்கள் வேலையை நாங்கள் தடுப்பதில்லை. அது போன்று எங்கள் வேலையைத் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை.
என்றாவது ஒரு நாள் சந்திரன் சரியாக வேலை செய்யவில்லை என்று சூரியன் உணர ஆரம்பித்து, சந்திரனின் வேலையை செய்ய தொடங்கினால், பூமியில் குழப்பம் தான் வரும். சூரியன் தன் வேலையைச் செய்கிறது. சந்திரன் தன் வேலையைச் செய்கிறது. ,அப்போதுதான் ஒட்டுமொத்த அமைப்பும் சீராக இயங்கும். முதல்வா் அவரது வேலையைச் செய்யட்டும், நீங்கள் தில்லியின் சட்டம் ஒழுங்கை சீா்படுத்துங்கள். கஞ்சாவாலா போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என முதல்வா் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். மேலும், துணைநிலை ஆளுநருக்கு பதிலளிக்கும் விதமாக தொடா்ச்சியாக டிவிட்டரிலும் தில்லி முதல்வா் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளாா்.