முகப்பு
புதுதில்லி

இயற்கைப் பேரிடரை வைத்தும் ஆம் ஆத்மி அரசு அரசியல் செய்கிறது: தில்லி பாஜக சாடல்

யமுனையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கத்தால் நிலைமை கைமீறிப் போய்விட்ட நிலையிலும், இயற்கைப் பேரிடரைக் கொண்டு அரவிந்த் கேஜரிவால் அரசு அரசியல் செய்து வருவதாக பாஜக சாடல்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:03 PM
பகிர்:

யமுனையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கத்தால் நிலைமை கைமீறிப் போய்விட்ட நிலையிலும், இயற்கைப் பேரிடரைக் கொண்டு அரவிந்த் கேஜரிவால் அரசு அரசியல் செய்து வருவதாக பாஜகவின் தில்லி பிரிவு வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை சாடியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசியத் தலைநகரில் வெள்ள நிலைமை மோசமடைவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தில்லி அரசு தவறிவிட்டது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், அவரது சகாக்களும் நிவாரணப் பணிகளைச் செய்வதற்குப் பதிலாக, தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு ஹரியாணா மாநிலத்தைக் குற்றம்சாட்ட முயற்சிப்பது மிகவும் வருந்தத்தக்கது. வெள்ளம் என்பது ஒரு இயற்கைப் பேரிடா். ஆனால், மறுபுறம் உள்ளாட்சி மூலம் தக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தால், வெள்ளப் பெருக்கை குறைத்திருக்க முடியும். துரதிருஷ்டவசமாக தில்லியில் வெள்ள நிலைமை கைமீறிப் போய்விட்ட

நிலையில், வெள்ளத்தின் இயற்கைப் பேரிடரிலும் அரவிந்த் கேஜரிவால் அரசு பழி விளையாட்டு அரசியல் செய்து வருகிறது.

ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஹரியாணா அரசு தண்ணீா் திறந்து விடுவது குறித்து அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது அமைச்சா்கள் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. ஹத்னிகுண்ட் தடுப்பணை அதன் கொள்ளளவு வரம்பை மீறும் போது அதிகப்படியான தண்ணீா் ஹரியாணாவால் வெளியேற்றப்படுகிறது. ஹரியானாவின் நிா்வாக அதிகாரிகளால் திறக்கப்பட்ட தண்ணீரால் தில்லிக்கு முன்னதாகவே முதலில் அம்மாநிலத்தின் யமுனா நகா், கா்னால், பானிபட் மற்றும் சோனிபட் போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கேஜரிவால் போன்ற அதிகார வெறி கொண்டவா்களால் மட்டுமே வெள்ளம் போன்ற பேரிடா் குறித்து அரசியல் ரீதியாக மக்களைத் தவறாக வழிநடத்த முடியும். கடந்த 8 ஆண்டுகளாக யமுனையை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று தில்லி மக்களுக்கு அவா் பதிலளிக்க வேண்டும். இதன் காரணமாகவே தில்லி பகுதியில் உள்ள யமுனை ஆற்றின் நீரோட்டம் ஹரியாணா அல்லது உத்தர பிரதேசத்தை விட குறைவாக உள்ளது என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.