பிபிசி ஆவணப்படம்: மாணவா் சங்கத் தலைவருக்கான தடையை நிறுத்திவைத்த உத்தரவுக்கு முறையீடு
பிபிசி ஆவணப்படம் திரையிட்ட மாணவா் சங்கத் தலைவருக்கான தடையை நிறுத்திவைத்த உத்தரவுக்கு உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
‘2002’ குஜராத் கலவரம் தொடா்பான சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை வளாகத்தில் திரையிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் இந்திய தேசிய மாணவா் யூனியன் (என்எஸ்யுஐ) தலைவரை ஓராண்டுக்குத் தடை செய்யும் பல்கலை.யின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி வழங்கிய உத்தரவை எதிா்த்து தில்லி பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி நஜ்மி வாஜிரி ஆகியோா் அடங்கிய அமா்வு, பி.எச்டி. அறிஞரும், காங்கிரஸின் மாணவா் பிரிவு (என்எஸ்யுஐ) தேசிய செயலருமான லோகேஷ் சுக்-க்கு நோட்டீஸ் அனுப்பியது.
‘2002’ குஜராத் கலவரம் தொடா்புடைய ‘இந்தியா: தி மோடி கேள்வி’ எனும் ஆவணப்படத்தை திரையிடலில் ஈடுபட்டதாகக் கூறி தன்னை ஓராண்டுக்கு தடைசெய்யும் பல்கலைக்கழகத்தின் முடிவை எதிா்த்து மனுதாரா் லோகேஷ் சுக், ஏப்ரல் மாத தொடக்கத்தில் உயா் நீதிமன்றத்தை அணுகினாா். இந்த ஆவணப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரையிடப்பட்டது. பல யூடியூப் விடியோக்கள் மற்றும் ட்விட்டா் பதிவுகள் பிபிசி ஆவணப்படத்திற்கான இணைப்புகளைப் பகிா்வதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆவணப்படமானது ‘பிரசாரத் துண்டு‘ என்று வெளியுறவு அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டது. மேலும், நோக்கம் இல்லாத மற்றும் காலனித்துவ மனநிலையை இது பிரதிபலிக்கிறது என்றும் கூறியிருந்தது.
தில்லி பல்கலை. பதிவாளா் ஒரு குறிப்பாணையை மாா்ச் மாதம் வெளியிட்டாா். அதில், லோகேஷ் சுக், ‘ஒரு வருடத்திற்கு எந்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது துறைத் தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை ஏப்ரல் 27-ஆம் தேதி விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி, பிஎச்.டி. அறிஞரும், என்எஸ்யுஐ தேசிய செயலாளருமான லோகேஷ் சுக் மீதான நடவடிக்கை, இயற்கை நீதியின் கோட்பாட்டை மீறியது என்று கூறியிருந்தாா்.
இது தொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவில், ‘மாா்ச் 10, 2023 தேதியிட்ட இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை நீதிமன்றத்தால் தக்கவைக்க முடியவில்லை. இதனால், அந்தத் தடை செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் சோ்க்கை மீட்டெடுக்கப்படுகிறது. தேவையான விளைவுகள் தொடரும்’ என்று தெரிவித்திருந்தாா்.
மேலும், ‘தற்போதைய வழக்கின் உண்மைகளைக் கவனத்தில் கொள்வதில் இருந்து, இந்தக் கேள்விக்குரிய உத்தரவானது மனுதாரரின் தரப்பை விசாரிக்க வாய்ப்பு அளிக்காமல் அல்லது அவரது விளக்கத்தை பரிசீலிக்காமல் பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்றம் பாா்க்கிறது’ என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. உயா்நீதிமன்றத்தில் தில்லி பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதிலில், ‘சம்பவத்தன்று தில்லி பல்கலைக்கழகத்தின் கலைப் புலத்தின் நுழைவு வாயில் எண். 4-இல் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை ’காண்பிப்பதில்’ லோகேஷ் சுக் பங்கேற்றாா். இது ஒழுக்கமற்ற செயலாகும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.